மலேசிய விமானத்தை தேடும் பணிக்காக ரூ.333 கோடி நிதி திரட்ட பயணிகள் குடும்பம் முடிவு

263 0

மூன்று ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தனியார் உதவியுடன் தேடும் பணிக்காக ரூ.333 கோடி நிதி  திரட்ட விமான பயணிகளின் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு  கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி  எம்எச் 370 ரக மலேசிய ஏர்லைன்ஸ் விமானம்  புறப்பட்டது. 239 பேருடன் சென்ற அந்த விமானம்  நடுவானில் சென்றபோது திடீரென மாயமானது. இந்த விமானத்தில் சென்றவர்கள் கதி என்ன ஆனது என இதுவரை தெரியவில்லை.

இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில்  முன்னேற்றம் ஏற்படாததால் கடந்த ஜனவரி 17ம் தேதி தேடும் பணி நிறுத்தப்பட்டது.  விமானம் மாயமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் அந்த  விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர் மிக கவலையடைந்துள்ளனர். அவர்கள் மாயமான அந்த விமானத்தை தனியார் மூலம்  தேடுவதற்காக 50 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளனர். இந்திய மதிப்பில் இது ரூ.333.7 கோடியாகும்.  மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் லியோ டியோங் லாய் கூறுகையில், `‘மாயமான விமானம் தொடர்பான அறிக்கை இந்த ஆண்டு  வெளியிடப்படும்’’ என்றார்.