ஹைட்ரோ கார்பன் திட்டம்: போராட்டக் குழுவினருடன் கலெக்டர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

304 0

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் 18-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மீண்டும் போராட்டக் குழுவினருடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்படும் என கலெக்டர் அளித்த உறுதிமொழியை பொதுமக்கள் ஏற்க மறுத்து நெடுவாசலில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து நெடுவாசலில் நாடியம்மன் கோவில் முன்பு போராட்டம் நடந்து வருகிறது. இதே போல நல்லாண்டார் கொல்லையிலும் வயல்வெளியில் தகரக்கொட்டகை அமைத்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் இளைஞர்கள், தன்னார்வ அமைப்பினர், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று வருகின்றனர்.

நெடுவாசல் நாடியம்மன் கோவில் முன்பு நடைபெறும் போராட்ட களத்திற்கு வருகை தரும் அரசியல் கட்சியினர் அனைவரும் நல்லாண்டார் கொல்லைக்கு சென்று அங்கு போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நல்லாண்டார் கொல்லை அருகே கோட்டைக்காட்டிலும் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தில் கடந்த 26-ந்தேதி அறப்போராட்டத்தை தொடங்கினர்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் கோட்டைக்காடு கிராமத்தில் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினரின் ஆழ் துளை கிணறுகளை மூட வேண்டும், இயற்கை எரிவாயு எடுக்க கூடாது, விவசாயிகளிடம் வாங்கிய நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கோட்டைக்காட்டில் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை பகுதி பொதுமக்கள் கலெக்டருடனான பேச்சு வார்த்தையில் பங்கேற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

போராட்டத்தில் குழந்தைகளுடன் பங்கேற்ற பெண்கள்.

நேற்று ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் கணேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் நல்லாண்டார் கொல்லை, நெடுவாசல் பொதுமக்கள் பங்கேற்கவில்லை. மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை முடிவின் அடிப்படையில் கலெக்டருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவித்து புறக்கணித்தனர்.

இந்நிலையில் மத்திய மந்திரியுடன் போராட்டக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அறவழிப் போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

இது பற்றி அவர்கள் கூறும் போது, திட்டத்தை முழுமையாக கைவிடக்கோரி மத்திய மந்திரியை சந்தித்தோம். இத்திட்டத்தால் எங்களுக்கான பாதிப்புகளை அரசுக்கும், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்கும் தெளிவாக விளக்கியுள்ளோம் . மக்கள் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் போதிய விளக்கம் அளிக்கவில்லை. எனவே அறவழிப்போராட்டம் தொடரும் என்றனர். அதன்படி நெடுவாசலில் இன்று 18-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, கோட்டைக்காடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்படும் என கலெக்டர் கணேஷ் உறுதியளித்தும், அதனை பொதுமக்கள் ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மீண்டும் போராட்டக் குழுவினருடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.