ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தி.மு.க. தான் மூலகாரணம் – முதலமைச்சர் பழனிசாமி

342 0

சென்னை ஆர்.கே.நகரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அ.தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல் தலைமை தாங்கினார்.

இதில் முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தற்போது சசிகலாவையும், மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறி வசைப்பாடி வருகிறார்கள்.

யாரால் உருவானார்களோ, அவரையே வசைபாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா இறந்த போது உடனடியாக முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

பதவி ஏற்ற மறுநாளே ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது என்று விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் இருந்தும் அவர் செய்யாதது ஏன்? தற்போது அவர் ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாகவும், சசி கலாவை பற்றி குறை கூறுவதும் ஏற்புடையதல்ல.

தற்போது நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

இதற்கு மூலக்காரணமே தி.மு.க. தான். கடந்த 2009ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி நடைபெற்று வரும் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடக்கூடிய நிலையில், ஒரு பிரிவினர் மட்டும் போராட்டத்தை வலுப்படுத்தி கொண்டே செல்கின்றனர்.

தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பாதகம் விளைவிக்கும் எந்த திட்டத்தையும், எந்த செயல்பாட்டையும் ஜெயலலிதா ஆணையின்படி இயங்கும் இந்த அரசு அனுமதிக்காது  என குறிப்பிட்டார்.