நீதிமன்ற சுயாதீனத்துவத்தை எவ்வித தலையீடுகளுமின்றி பேணுவது அவசியம்

151 0

ஜனநாயக நாடொன்றில் எவ்வித வெளியகத்தலையீடுகளுமின்றி நீதிமன்றத்தின் சுயாதீனத்துவத்தைப் பேணுவது இன்றியமையாததாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கை தொழில்வல்லுனர்கள் அமைப்புக்களின் கூட்டிணைவு, அதனூடாகவே நீதிபதியினால் குறித்தவொரு விவகாரத்தை உரியவாறு அணுகவும், அவ்விவகாரம் தொடர்பில் எவ்வித பயமும் பக்கச்சார்புமின்றி நீதியை நிலைநாட்டவும் முடியும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை தொழில்வல்லுனர்கள் அமைப்புக்களின் கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அரசியலமைப்பின் பிரகாரம் எமது நாட்டின் இறையாண்மையானது பாராளுமன்றம், நிறைவேற்றதிகாரம் மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்று பிரதான கட்டமைப்புக்களிலேயே தங்கியுள்ளது.

இவற்றில் அதிகாரங்களைப் பிரித்து வழங்கும் செயன்முறையைப் பொறுத்தமட்டில் நீதிமன்றமே மேலோங்குகின்றது. மக்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்துகின்ற மற்றும் பாதுகாக்கின்ற நீதித்துறைசார் நிர்வாகத்தில் உயர்நீதிமன்றத்துக்கே முதன்மையான இடம் வழங்கப்பட்டிருப்பதாக அரசியலமைப்பின் 105 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கையின் இறையாண்மை மக்களிடத்திலேயே தங்கியிருப்பதாக அரசியலமைப்பின் 3 ஆம் பிரிவு கூறுகின்றது. எனவே இந்நாட்டின் சட்டத்தைப் பொறுத்தமட்டில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானதாகும்.

அவ்வாறிருக்கையில் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவு குறித்து ஆராயுமாறு பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பான குழுவுக்கு சபாநாயகர் பரிந்துரைத்திருப்பது மிகுந்த கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.

அரசியலமைப்புக்கு அமைவான ஜனநாயக நாடொன்றில் நீதிமன்றமும் நீதிமன்றக்கட்டமைப்புமே சட்டத்தின்படி இயங்கும் சமூகத்தைக் கட்டியெழுப்புகின்றது.

அதன்படி நீதிமன்ற சுயாதீனத்துவம் என்பது அனைத்து விதமான வெளியக அழுத்தங்கள் மற்றும் தலையீடுகள் அற்ற நிலையாகும்.

எனவே ஜனநாயக நிர்வாகக்கட்டமைப்பின் இயங்குகையை உறுதிசெய்வதற்கு நீதிமன்றத்தின் சுதந்திரம், சுயாதீனத்துவம் மற்றும் வேறாக்கம் என்பன உரியவாறு பேணப்படுவது அவசியமாகும்.

அதனூடாகவே நீதிபதியினால் குறித்தவொரு விவகாரத்தை உரியவாறு அணுகவும், அவ்விவகாரம் தொடர்பில் எவ்வித பயமும் பக்கச்சார்புமின்றி நீதியை நிலைநாட்டவும் முடியும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.