இலங்கைத் தீவின் ஈழத்தமிழர் இனப்பிரச்சினைக்கு உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தீர்வாகாது -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

335 0

10. ஏப்ரல் 2023
நேர்வே

எதிர்வரும் ஆனி மாத ஐநா அமர்வைக் குறிவைத்து சிறிலங்கா அரசு மிகவேகமாகச் செயற்பட்டுக் கொண்டு இருக்கிறது. தமிழ் மக்கள் மீதான பல தசாப்தகால ஒடுக்குமுறைகளைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்க மாதிரியான உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையைப் பயன்படுத்துவதற்காக இலங்கை அமைச்சர்கள் அவசர அவசரமக தென் ஆபிரிக்கா சென்று வருகின்றனர். அதே வேளையில் வடக்குக் கிழக்குப் பிரதாசங்களிலுள்ள புராதன ஆலயங்களை தகர்த்து அவ்விடங்களில் பௌத்த விகாரைகளை கட்டி பௌத்தசிங்கள மயமாக்கலை முடுக்கிவிட்டுள்ளனர். குறிப்பாக வரவிருக்கும் ஐ.நா சபை மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை ஆகியவற்றிற்கான நடவடிக்கை குறித்து ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச சமூகத்திலிருந்து தப்பிப்பதற்கான மற்றொரு ஏமாற்றும் தந்திரமாக தென் ஆபிரிக்க மாதிரியான உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையைக் கையில் எடுத்துள்ளனர். இந்தப் பொறிமுறை பிரயோகிக்கப்பட்டால், படுபாதகமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர் தண்டனையில் இருந்து தப்புவதற்கு வழிவகுக்கும். மேலும் சிறிலங்கா இனவழிப்பாளர்கள் தமது எழுபது ஆண்டுகால படுபாதகக் குற்றங்களைத் தொடர இது உதவும். இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு உலக நாடுகள் அனுதாபம் தெரிவிக்கும் அதேவேளை, தீவில் உள்ள தமிழ் மக்கள் பொருளாதார ஒடுக்குமுறைக்கும் திட்டமிட்ட இனவழிப்புக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை சர்வதேச சமூகம் இன்றுவரை புரிந்துகொள்ளவில்லை.

தென் ஆபிரிக்கா அரசானது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மாதிரியை உருவாக்க இலங்கைக்கு உதவுவதை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் உணர்வுகளையும் பௌத்தசிங்கள மேலாதிக்க அரசின் நயவஞ்சக உள்நோக்கத்தையும் புரிந்துகொண்டு நிறுத்த வேண்டும். பல தசாப்த கால ஒடுக்குமுறைக்குக் காரணகர்த்தவாக இருக்கும் இலங்கை அரசு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மாதிரியைப் பயன்படுத்த அருகதையற்றது என்பதை கடந்தகால அரச ஆணைக்குழுக்களின் தோல்விகளே சாட்சியமாகும். இது குற்றவாளியையே தனக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதியாக நியமிப்பதற்கு ஒப்பானதாகும். இத்தகைய முயற்சி சர்வதேச சமூகத்தை, குறிப்பாக எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கவிருக்கும் நாடுகளை ஏமாற்றும் ஒரு புரளியே அன்றி வேறில்லை. போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்ற குற்றங்களை இழைத்தவர்களைப் பாதுகாக்க இலங்கை அரசு அரங்கேற்றும் சூழ்ச்சியில் சிக்கிக் கொள்ளாமல், பகுத்தறிவுடன் செயற்படுமாறு சர்வதேச சமுகத்தைக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

இலங்கைத் தீவின் ஈழத்தமிழர் இனப்பிரச்சினைக்கு உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தீர்வாகாது என்பது சிங்கள அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும். உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை சிறிலங்காவிற்கு ஏன் பொருந்தாது? தென்ஆபிரிக்காவில் ஒடுக்கப்பட்டவர்கள் பெரும்பான்மை கறுப்பு இனத்தவர்கள். அடக்குமுறையாளர்கள் சிறுபான்மையாக வாழ்ந்த வெள்ளை இனத்தவர்கள். வெள்ளை இனத்தவர் தமது அடக்குமுறைத் தவற்றை உணர்ந்து அரசாட்சியை பெரும்பான்மை கறுப்பு இனத்தவரிடம் ஒப்படைத்த பின்னர் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட கறுப்பு இனத்தவர் தாமே உருவாக்கியதே உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையாகும். சிறிலங்காவில் பெரும்பன்மைச் சிங்கள இனம் அரச கட்டமைப்பை தன்பால் வைத்துக்கொண்டு தமிழரை அடக்கி ஒடுக்குகின்றனர். இன்றுவரை ஈழத்தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரக் குற்றங்களின் நீடித்த உளவியல் வடு தொடர்கிறது. தொடர்ச்சியான வன்முறைச் சுழற்சிகளால் சகிப்புத்தன்மையில் இருந்து வெறுப்புணர்ச்சி உச்சத்திற்கு சென்றுள்ளது. சிங்கள மேலாதிக்க மனநிலையில் மாற்றங்கள் இல்லை.

சிறிலங்கா அரசின் ஏமாற்று வித்தைக்குள் தென் ஆபிரிக்கா அரசையும் சர்வதேச நாடுகளையும் விழுந்துவிட வேண்டாம் என்று ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழர் சார்பாகக் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை ஆகிய நாம் கேட்டுக்கொள்கிறோம். அதே வேளையில், எமது மக்களெள்லோரும் ஒன்றுதிரண்டு இந்த ஏமாற்று முயற்சியை கடுமையாக எதிர்த்து முறியடிக்காவிடில் இலங்கை தீவில் தமிழரின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும்.

-தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்-

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-