பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக எதிர்ப்பதாகவும், என்ன விலை கொடுத்தாயினும் இந்த சட்டத்தை நீக்குவதற்கு முழு முயற்சியை எடுப்போம் என்றும், பாராhளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சிவஞானம் சிறீதரன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், ‘இப்பொழுது இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது, முகநூல் ஊடாகவோ, ருவிட்டர் ஊடாகவோ, வட்ஸ் அப் ஊடாகவோ தகவலைப் பரிமாற முடியாத அளவுக்கு மிக மோசமான ஒரு சட்டமாக, குறிப்பாக சிங்கள இளைஞர்களையும் சிங்கள மக்களையும் பாதிக்கப்போகின்ற, சிங்கள இனத்தையே அடிமைப்படுத்தப்போகின்ற சட்டமாக இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகின்றது. உலகத்திலே யாரும் எதிர்பார்க்காத ஒரு சட்டத்தை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக கொண்டுவருவதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். அதனை நாங்கள் பூரணமாக எதிர்ப்போம். என்ன விலை கொடுத்தாவது அதனை நீக்குவதற்காக முழு முயற்சிகளையும் மேற்கொள்வோம்;’ என்று குறிப்பிட்டுள்ளார்.

