நிலக்கரி சுரங்க ஏலப்பட்டியலிலிருந்து தமிழ்நாட்டுப் பகுதிகள் நீக்கப்பட வேண்டும்

66 0

நிலக்கரி சுரங்க ஏலப்பட்டியலிலிருந்து தமிழ்நாட்டுப் பகுதிகள் நீக்கப்பட வேண்டும் என காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் நேற்றைய தினம் (ஏப்.9) கூட்டியக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமை வகிக்தார். அனைவரையும் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்கள் பி.எஸ்.மாசிலாமணி, சாமி.நடராஜன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்கள். கடந்த மாதம் 29ம் தேதி மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டில் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில், புதிதாக நிலக்கரி சுரங்கத்தை தொடங்குவதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டார்கள்.

உடனடியாக தமிழ்நாடு முதல்வர், பிரதமருக்கு மிக கடுமையான முறையில் தனது ஆட்சேபனையை தெரிவித்து கடிதம் எழுதினார், கடிதம் எழுதியது மட்டுமல்லாமல் மறுநாளே சட்டமன்றத்தில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார், அதில் அனைத்து கட்சி தலைவர்களும், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி, ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுகளை மத்திய அரசுக்கு உணர்த்தும் விதமாக கருத்துக்கள் தெரிவித்தனர். இந்த இரண்டு நடவடிக்கைகளையும் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் பாராட்டுகிறது, வரவேற்கிறது.

நேற்றைய தினம் பிரதமர் தமிழகம் வருகையை முன்னிட்டு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஊடகங்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டு, அதைத்தொடர்ந்து இந்த திட்டமே ரத்து செய்யப்பட்டு விட்டது என்கிற முறையில் ஊடகங்களும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை, மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் அமைச்சர் வாக்குறுதியை வழங்கி உள்ளார்கள். அது வாக்குறுதியே தவிர ரத்து சம்பந்தமான உத்தரவு அல்ல. தமிழ்நாட்டு பகுதிகளுக்கு ஏலத்திலிருந்து விலக்களிக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இன்றைய தேதி வரை தமிழ்நாட்டுப் பகுதிகள் நீக்கப்படவில்லை, அதிகாரபூர்வமாக நிலக்கரி அமைச்சகத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை.

தமிழ்நாடு அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது தமிழக முதல்வர், அவருக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் மத்திய அரசிடம் இருந்தோ பிரதமர் அலுவலகத்தில் இருந்தோ இதுவரை வரவில்லை. ஆகவே அண்ணாமலை வந்து பார்த்தார். அவரது கோரிக்கையை ஏற்று விலக்கு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை அமைச்சர் அளித்துள்ளார். பாஜக அமைச்சர்கள் அளிக்கக்கூடிய வாக்குறுதிக்கு எந்த விதமான உத்தரவாதமும் கிடையாது. ஏற்கெனவே பல கசப்பான அனுபவங்கள் உள்ளது ஐக்கிய விவசாய முன்னணி நாடு தழுவிய, அளவில் போராடிய போது எழுத்துப்பூர்வமாக உறுதிமொழியை வழங்கினார்கள். அந்த உறுதிமொழி அடிப்படையில் கூட நடந்து கொள்ளாதவர்கள் தான் பாஜக ஆட்சியை சார்ந்தவர்கள். ஆகவே அமைச்சருடைய வாக்குறுதியை நம்ப முடியாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த கூட்டத்தின் வாயிலாக மத்திய அரசாங்கம், நிலக்கரி அமைச்சகம், உடனடியாக இந்த ஏலப் பட்டியலில் இருந்து தமிழ்நாடு பகுதிகள் நீக்கப்படுகிறது, விலக்களிக்கப்படுகிறது என்ற உத்தரவை வெளியிட வேண்டும். ஏலப் பட்டியலில் இருந்து தமிழ்நாடு பகுதிகள் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வற்புறுத்துகிறோம். காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற முறையிலும், தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்கிற முறையிலும், தமிழகத்தின் நெற்களஞ்சியத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தக் கூடிய வகையிலான எந்த ஒரு திட்டத்தையும் காவிரி டெல்டா பகுதிகளிலே மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற கூடாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

இதை மீறி நிலக்கரி சுரங்கம் மட்டுமல்ல, பெட்ரோல் எடுப்பது, மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற பூமிக்கு, காவிரி டெல்டா பகுதிக்கு சேதம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது. இந்த மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற உத்தரவு வெளியிட வேண்டும். ஏலப்பட்டியலிலிருந்து தமிழ்நாட்டுப் பகுதிகள் நீக்கப்பட வேண்டும். இந்த இரண்டு கோரிக்கையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இம்மாத இறுதிக்குள் இந்த அறிவிப்பு வரவில்லை என்றால், மே முதல் வாரத்தில் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் ஒன்று கூடி மத்திய அரசுக்கு எதிரான வலுவான போராட்டத்தை முன்னெடுப்பது என இந்த கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு பகுதி விலக்களிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது, பிரதம மந்திரி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அரசியல் ரீதியாக தங்கள் கட்சிக்கு பலன் அளிக்கும் என்ற உள்நோக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தி எனக்கு கருதுகிறேன். பாஜகவின் இத்தகைய உள்நோக்கம் வெற்றி பெறாது, தமிழக மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். மத்திய பாஜக அரசு மக்கள் மீது எத்தகைய அக்கறையும் இல்லாத அரசு, அரசியல் லாபம் கருதி பாஜக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கருதுகிறோம்” என்றார்.

கூட்டத்தில் தாளாண்மை உழவர் இயக்க தலைவர் கோ.திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.