பதவி மோகம் கொண்ட எவரேனும் இருந்தால் ஜனாதிபதி செயலகத்துக்கு சென்று கையேந்துங்கள்

142 0

மைச்சுப் பதவியில் மோகம் கொண்ட எவரேனும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தால், ஜனாதிபதி செயலக வளாகத்தில் சென்று கையேந்துமாறு கூறிக்கொள்கின்றேன்.

அதனை விடுத்து ஐக்கிய மக்கள் சக்தியில் அனைவரும் சென்று ஒருபோதும் அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சனிக்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். ஆனால், அரசாங்கம் பொதுஜன பெரமுனவுடையதாக காணப்படுகிறது.

பொதுஜன பெரமுனவினருக்கு நாட்டைக் கொண்டு செல்லும் நிபுணத்துவம் இன்மையின் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் அரசாங்கத்துடன் இணைவதற்கு தயாராக இல்லை. ஆனால், அமைச்சுப்பதவி மீது மோகம் கொண்ட சிலரும் உள்ளனர். அவ்வாறானவர்களை ஜனாதிபதி செயலக வளாகத்தில் சென்று யாசகர்களைப் போன்று அமர்ந்துகொள்ளுமாறு கூறுகின்றோம். அவ்வாறு அமர்ந்திருந்தால் அதனைக் காணும் ஜனாதிபதி அமைச்சுப் பதவியை பிச்சையாக வழங்குவார்.

அவ்வாறன்றி ஐக்கிய மக்கள் சக்தியாக சென்று எவரும் அமைச்சுப் பதவிகளை பெறப்போவதில்லை. அரசியல், பொருளாதார புரட்சிகளை இலக்காக கொண்டதாகவே எமது பயணம் அமைந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள நிபுணர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டுமெனில், பாராளுமன்ற குழுக்களுக்கு அவர்களை தலைவர்களாக நியமிக்க முடியும். ஆனால், அரசாங்கம் அதனை செய்யவில்லை என்றார்.