கல்ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் அக்போபுர நிலையத்துக்கு அருகில் தடம் புரண்டதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குறித்த புகையிரதம் தடம் புரண்ட போது அதன் ஒரு பெட்டி கவிழ்துள்ளது. அதில் பயணித்த 17 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளனர். காயமடைந்த 17 பேரும் சிகிச்சைகளுக்காக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்லோயாவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இவ்விபத்தின் காரணமாக சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் குறித்த புகையிரதக் கடவையூடான புகையிரத சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

