உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் : திருத்தங்கள் வேண்டாம், முழுமையாக இரத்துச்செய்யுங்கள்

143 0

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலமானது அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்திருக்கும் அதேவேளை, ஜனநாயக சமுதாயமொன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசாங்கம் இச்சட்டமூலத்தை முழுமையாக இரத்துச்செய்யவேண்டும் என்று மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் பின்னணியில், அச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதைத் தாமதிக்கப்போவதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வியாழக்கிழமை (06) அறிவித்துள்ளார்.

இவ்வறிவிப்பினால் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் ஏதேனும் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுமா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தேசிய சமாதானப்பேரவையின் தலைவரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி ஜெஹான் பெரேரா, ‘இதனை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் உயர்வாகக் காணப்படுவதனால், இதனை முற்றாக நீக்குவதே உகந்ததாகும்’ என்று தெரிவித்தார்.

மேலும் உத்தேச பயங்கரவாதத்தடைச்சட்டமூலமானது 97 பக்கங்களைக் கொண்டிருப்பதாகவும், அதில் திருத்தங்களை மேற்கொள்வது மிகக்கடினமான செயல் என்றும் சுட்டிக்காட்டிய கலாநிதி ஜெஹான் பெரேரா, அச்சட்டமூலத்தில் காணப்படும் முக்கிய குறைபாடுகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.

குறிப்பாக இச்சட்டமூலத்தின் பிரகாரம் நீதிவானை மீறி, தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த ஜெஹான் பெரேரா, ஆனால் அனைத்து அதிகாரங்களும் நீதிவானுக்கு வழங்கப்படும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

அதுமாத்திரமன்றி இச்சட்டமூலத்தில் ‘பயங்கரவாதக்குற்றம்’ என்ற பதத்துக்கு வழங்கப்பட்டுள்ள வரையறை மிகவும் விரிவாகக் காணப்படுவதாகவும், எனவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுதல், கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை வெளியிடல் என்பன உள்ளடங்கலாக அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு செயலையும் பயங்கரவாதமாக மாற்றக்கூடிய வாய்ப்புக்காணப்படுவதாகக் குறிப்பிட்டார். ஆகவே அவ்விடயம் திருத்தியமைக்கப்படவேண்டும் என்றும் கலாநிதி ஜெஹான் பெரேரா வலியுறுத்தினார்.

அதேவேளை இதுகுறித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ‘அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடல் ஆகிய விடயங்களைக்கூட பயங்கரவாத செயற்பாட்டுக்குள் உள்ளடக்கும் வகையிலான மிகவும் பரந்த வரையறையைக்கொண்டிருப்பது உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் மிகமுக்கிய குறைபாடாகும்’ என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலமானது அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்திருக்கும் அதேவேளை, ஜனநாயக சமுதாயமொன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதனால் அச்சட்டமூலத்தை முற்றாக நிராகரிக்கின்றோம்.

அதுமாத்திரமன்றி தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள், அதன் முழுச்சுமையையும் மக்கள்மீது சுமத்துவதற்காக இச்சட்டத்தைப் பயன்படுத்துவார்கள் என்ற நாம் அஞ்சுகின்றோம்.

எனவே அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள இந்த உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் முழுமையாக நீக்கப்படவேண்டும்’ என்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.