உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல!

201 0

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதம் குறித்த வரையறையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் தாம் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்படுவோம் என்ற அச்சத்தில், பொது நலன் சார்ந்த விஷயங்களில் பேசவோ அல்லது தங்கள் கருத்தை வெளிப்படுத்தவோ பின்வாங்கக் கூடும். இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளதாவது:

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரிவு 3 (1) இல்  பயங்கரவாதத்தின் வரையறை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை மறுபரிசீலனை செய்வதோடு , குறித்த வரையறைக்குள் வரும் செயல்களை தெளிவுபடுத்துவதற்கும் குறிப்பிட்ட திருத்தங்களை பரிந்துரைக்க வேண்டும்.

பயங்கரவாதம் குறித்த வரையறை நீண்ட காலமாக ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது. சட்ட ரீதியான கருத்து வேறுபாடுகள் மற்றும் உண்மையான பயங்கரவாதச் செயல்களை வேறுபடுத்திப் பார்ப்பதை இந்த சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறை கடினமாக்குகிறது.

அத்தோடு இந்த சட்ட மூலமானது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையை மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பறிக்க முடியாத உரிமையான பேச்சுரிமையையும் மீறுவதாக அமைகின்றது.

‘பயங்கரவாதம் என்பது ஒரு வன்முறைச் செயலாகும், இது வற்புறுத்துவதற்கும், பயமுறுத்துவதற்கும் அல்லது பயத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இது ஒரு கருத்தியல் நோக்கத்தை அடைவதற்கான ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், குறித்த சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறையின் பரந்த நோக்கம் அதன் பயன்பாட்டிற்கு வழிவகுக்கும்.

அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படை உரிமைகளில் தலையிடும் வழிகள், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை கட்டுப்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது.

போராட்டம் அல்லது பேரணியில் பங்கேற்கும் எவரும், அமைதியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினாலும், அதுவும் ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதப்படலாம். இது மக்களின் எதிர்ப்பைக் குரல் கொடுக்கும் உரிமையை நசுக்க வழிவகுக்கும்.

பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தில், பொது நலன் சார்ந்த விஷயங்களில் பேசவோ அல்லது தங்கள் கருத்தை வெளிப்படுத்தவோ பலர் பின்வாங்கக் கூடும். இது ஒரு அச்சமான சூழலை ஏற்படுத்தும்.

இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளது.