பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப் பெறுவதாயின் எழுத்துபூர்வமாக அறிவியுங்கள்!

154 0

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு தெரிவிக்கப்படுகின்ற எதிர்ப்பினைக் கருத்திற் கொண்டு, அதனை மீளப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அதனை எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தொடர்பில் வியாழக்கிழமை (6) வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பொதுமக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப் பெற முடிவு எடுக்கப்பட்டாலும், அந்த முடிவில் எமக்கு நம்பிக்கை இல்லை. இதற்கு முன்னரும் மக்களால் எதிர்க்கப்பட்ட சட்ட மூலங்களை அரசாங்கம் முதலில் மீளப் பெறுவதாக அறிவித்தாலும், பின்னர் தமது பெரும்பான்மையை பயன்படுத்தி அவற்றை நிறைவேற்றிக் கொண்ட சந்தர்ப்பங்கள் பல உள்ளன.

எனவே, அரசாங்கம் உத்தேச புதிய பங்கரவாத  சட்ட மூலத்தை மீளப் பெறுவதாக இருந்தால், அது தொடர்பில் தெளிவான எழுத்துமூல அறிவிப்பை வெளியிட வேண்டும். இதனால் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் கூட மீறப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

பயங்கரவாத செயற்பாடுகள் என சிலவற்றை வரையறுத்து அதன் ஊடாக மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்கே அரசாங்கம் இதன் ஊடாக முயற்சிக்கிறது. இந்த சட்ட மூலத்தின் ஊடாக எந்தவொரு பிரஜைக்கும் தமது உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்கான சுதந்திரம் அற்றுப் போகும்.

மேலும் இதன் ஊடாக எந்தவொரு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் தடுத்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு ஊடகங்களுக்கான சுதந்திரமும் முடக்கப்படக் கூடும். எனவே இவ்வாறான சட்ட மூலத்தை மீளப் பெற அரசாங்கம் தீர்மானிக்குமானால் அது வரவேற்கத்தக்கது. எனினும் அதனை எழுத்பு பூர்வமாக அறிவிக்கும் வரை அதில் நம்பிக்கை கொள்ள முடியாது என்றார்.