வெளிநாடுகளிலுள்ள சொத்துக்களை கையாள்வதை தடை செய்ய கட்டளை பிறப்பிக்க பரிந்துரை

156 0

சட்டவிரோதமான முறையில்  வெளிநாடுகளில் உள்ள ஆதனம் மற்றும் வைப்பிலிடப்பட்டுள்ள நிதி ஆகியவற்றை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சந்தேக நபர் கையாள்வதை தடை செய்யும் வகையில் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு மேல் நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் செய்யும் அதிகாரம் இலஞ்சம், ஊழலுக்கு எதிரான விடயங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு தொடர்பான சட்டமூல வர்த்தமானி வியாழக்கிழமை (06) வெளியிடப்பட்டது.

ஏதேனும் ஒரு ஆதனம் இந்த சட்டத்தின் கீழ் ஒரு தவறின் விடயப்பொருளாக காணப்படுமாயின் அல்லது அத்தகைய ஏதேனும் தவறைப் புரிவதில் பயன்படுத்தப்பட்டுள்ளது என ஆணைக்குழு  கருதுகின்ற அத்தகைய ஆதனம் இலங்கைக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கின்றன அல்லது வைப்பிலிடப்படும் போது,ஆணைக்குழுவானது அந்த சந்தேக நபர் அந்த ஆதனத்தை அல்லது நிதியை கையாள்வதைத் தடைசெய்கின்ற கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு மேல் நீதிமன்றத்திற்கு ஆணைக்குழுவால் விண்ணப்பிக்க முடியும்.

சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஒரு விடயம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் போது வெளிநாட்டு அரசுகள், சர்வதேச புலனாய்வு அதிகாரிகள், சர்வதேச சட்டவியலாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான பரிந்துரைகளில் ‘ஊழல் ஒழிப்பு சட்டம் இயற்றல்’ முக்கியமானதாக கருதப்படுகிறது.ஊழலுக்கு எதிரான சட்டமூல வரைபை தயாரிக்க அமைச்சரவை கடந்த ஆண்டு ஜுலை மாதம்  அனுமதி வழங்கியது.

இதற்கமைய நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட சட்டமூல வரைபு அண்மையில் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டு நேற்றைய தினம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூல வரைபில் ஜனாதிபதி, மாகாணமுதலமைச்சர்கள் , ஆளுநர்கள்,தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரச சேவையில் உயர் அதிகாரிகள் தங்களின் சொத்து விபரங்களை வருடாந்தம் உரிய தரப்பினருக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நீதியமைச்சர் உத்தேசித்துள்ளார்.