பல்கலைக்கழக பேராசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்துக்கு அரசாங்கம் முறையான பதிலொன்றை வழங்கினால் போராட்டத்தை கைவிடுவதற்கு தயாராக இருக்கிறோம்.
ஆனால் இதுவரை பேச்சுவார்த்தைக்கு கூட அரசாங்கம் அழைப்பு விடுக்கவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷஷ்ம பென்னெஹக தெரிவித்தார்.
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னெடுத்துவரும் தொழிற்சங்க போராட்டம் ஒரு மாதகாலத்தை அண்மித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடந்த மார்ச் 9ஆம் திகதி தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்தது. தற்போது ஒரு மாதகாலத்தை அண்மித்துள்ளது. ஆனால் எமது கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த பதிலையும் வழங்கவில்லை.
அரசாங்கம் முறையான பதிலொன்றை வழங்கினால் தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எமது கோரிக்கை தொடர்பாக குறைந்த பட்சம் பேச்சுவார்த்தைக்கு கூட ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்காமல் இருப்பது, இதனை காலம் தாழ்த்துவதற்காகும்.
அரச தரப்பில் பொறுப்பு வாய்ந்த யாராவது எம்முடன் கலந்துரையாடி, எமது கோரிக்கைகள் தொடர்பில் பதிலளிக்க குறிப்பிட்ட காலவரையறை ஒன்றை தெரிவித்தால், அது தொடர்பில் எங்களுக்கு ஒரு தீர்மானத்துக்கு வரலாம். ஆனால் அரசாங்கம் எதற்கும் தயார் இல்லாத நிலையே காண்கிறோம்.
அத்துடன் எமது தொழிற்சங்க போராட்டம் காரணமாக மாணவர்களுக்கு நட்டம் ஏற்படும் போது அதனை எந்த சந்தர்ப்பத்திலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களுக்கு தெரிவித்திருக்கிறோம். பரீட்சை நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
அதேநேரம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நடவடிக்கையில் பல விடயங்கள் இருக்கின்றன. அதாவது, பரீட்சை இடம்பெற ஒரு மாதகாலத்துக்கு முன்னர் எமது கோரிக்கையை முன்வைத்தோம். பரீட்சை இடம்பெற்று ஒரு மாதகாலம் நிறைவடைந்துள்ளது. அப்படி இருந்தும் அரசாங்கம் இதுவரை எந்த பதிலையும் வழங்காமல் இருக்கிறது. அரசாங்கம் ஏதாவது ஒரு பதிலை வழங்கினால்தான் எமக்கு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்கலாம்.
அதனால் இந்த விடயத்தில் எம்மை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக அரசாங்கம் இதுதொடர்பாக எம்முடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்துக்கு வராமல் இருக்கிறது என்றே கேட்கவேண்டும். அரசாங்கம் இன்று முறையான பதிலை வழங்கினால் மறுதினமே எமது கடமையை ஆரம்பிப்போம் என்றார்.

