உங்களாலும் என்னை போல தலைமை தாங்க முடியும்

69 0

நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் எழுச்சியூட்டும் உரையுடன் அரசியலில் இருந்து விடைபெற்றுள்ளார்.

மேதாவிகள் கூக்குரலிடுபவர்கள் மற்றும் கட்டியணைப்பவர்களும் ஒரு நாள் தலைமை தாங்க முடியும் என  அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

நீங்கள் கவலையடைந்தவராக உணர்வுபூர்வமானவராக இரக்கமுள்ளவராக காணப்படலாம்,நீங்கள் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துபவராக இருக்கலாம்,நீங்கள் ஒரு தாயாகயிருக்கலாம் அல்லது அவ்வாறு இல்லாமல் இருக்கலாம்,நீங்கள் ஒரு மேதாவியாக கட்டித்தழுவுபவராக அழுபவராகயிருக்கலாம் ஆனால் நீங்களும் ஒரு நாள் தலைமை தாங்க முடியும் என கண்ணீருடன் அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் பாராளுமன்றத்தில் இடம்பிடிக்கலாம் என்பது மாத்திரமல்ல என்னை போல தலைமை தாங்கலாம் எனவும் நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்கள் நியுசிலாந்தின் பிரதமராக பதவி வகித்த பின்னர் ஜனவரியில் ஜெசிந்தா  ஆர்டன் தனது பதவிவிலகலை  அறிவித்து அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தினார்.

தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கான சக்தி தன்னிடம் இல்லை என தெரிவித்த அவர் ஒக்டோபரில் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என குறிப்பிட்டார்.

 

ஜெசிந்தா  ஆர்டென் 2017 இல் தனது 37 வயதில் பிரதமரானார். ஜெசிந்தா  நியுசிலாந்தின் மூன்றாவது பெண் தலைவர் என்பதுடன் உலகின் மிகவும் வயது குறைந்த தலைவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் ஒரு வருட காலத்தில், பதவி வகித்த காலத்தில் தாயானவர் என்ற பெருமைக்குரியவரானார்.

2017 இல் பொதுத்தேர்தல் இடம்பெற்று ஏழு வாரங்களில் தொழில்கட்சியின்  தலைவராக நியமிக்கப்பட்டமை குறித்து இன்றைய உரையில் கருத்து தெரிவித்துள்ள ஜெசிந்தா  ஆர்டென் நான் அதனை ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஓடிக்கொண்டிருக்கும் புகையிரத்தை மேலும் முன்னோக்கி நகர்த்துவதற்கும் அதனால் மோதுப்படுவதற்கும் இடையிலான உணர்வு காணப்பட்டது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ஏனென்றால் தலைமை தாங்குவது குறித்த எனது தயக்கமும் அதேவேளை பொறுப்புணர்வும் ஒரேஅளவாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜெசிந்தா  ஆர்டென் தனது பதவிக்காலத்தில் 2019 இல் 51 பேரை பலிகொண்ட இரண்டு மசூதிகள் மீதான   கிறைஸ்சேர்ச் பயங்கரவாத தாக்குதல்  மக்கள் ஆதரவற்ற முடக்கலை தூண்டிய கொரோனா பெருந்தொற்று உட்பட பல்வேறு  நெருக்கடிகளை சந்தித்தார்.

மிகவும் துயரமான அல்லது அதிர்ச்சிகரமான தருணங்களில் மக்களின் வாழ்வில் இருந்ததாக தெரிவித்துள்ள ஜெசிந்தா  ஆர்டென் அவர்களின் முகங்களும் கதைகளும் எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளன என்றும் பதிந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது தனிப்பட்ட உணர்வுகள் குறித்து நாடாளுமன்ற உரையில் ஜெசிந்தா  ஆர்டென் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.பதவிக்கால கவலைகள் அச்சங்கள் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு தன்னை மேலும் கடினமானவராக்கவேண்டும்,வியத்தகு முறையில் மாறவேண்டும் போன்ற உணர்வுகள் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தன்னை அழுபவர் கவலைப்படுபவர் என வர்ணித்துள்ளார்.

ஆனால் அப்படிப்பட்டவராகயிருந்தாலும் இந்த பதவியில் நீடிக்க முடியும் என நான் நம்பிக்கை கொண்டிருந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.