இலங்கை நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீன தன்மையை கேள்விக்குட்படுத்த வேண்டாம்

71 0

லங்கை நீதிமன்றக் கட்டமைப்பின் சுயாதீனத் தன்மையை புறக்கணிக்கக்கூடியவாறான அல்லது அதற்கு வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியவாறான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நீதிமன்ற சுயாதீனத்துவத்தை புறக்கணிக்கும் வகையிலான இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம் மேலும் கூறியிருப்பதாவது:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த பின்னர் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பில் இராஜாங்க அமைச்சரொருவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரொருவரால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்களை மேற்கோள் காட்டி, கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளிப்படுத்தப்பட்டிருந்த கரிசனைகளை நாம் ஆதரிக்கின்றோம்.

‘நீதிமன்ற சுயாதீனத்துவம்’ என்ற கருத்தியலானது சர்வதேச பிரகடனங்களிலும், உள்நாட்டுக் கோட்பாடுகள் பலவற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, ‘நீதிமன்ற சுயாதீனத்துவமானது அரசினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு, நாட்டின் அரசியலமைப்பு அல்லது சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்’ என்றும், ‘நீதிமன்றமானது தம் வசமுள்ள உண்மைக்காரணிகளின் அடிப்படையில், சட்டத்துக்கு அமைவாக, எவ்வித மட்டுப்பாடுகளோ அல்லது அழுத்தங்களோ அல்லது அச்சுறுத்தல்களோ இன்றி தீர்மானம் மேற்கொள்ள முடியும்’ என்றும் நீதிமன்ற சுயாதீனத்துவம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை கோட்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை போன்று சட்டத்தின் ஆட்சியினால் நிர்வகிக்கப்படுகின்ற ஜனநாயக நாட்டுக்கு சுதந்திரமான நீதிமன்றக் கட்டமைப்பு இன்றியமையாததாகும். அதன்படி, நீதிமன்ற கட்டமைப்பும் நீதிபதிகளும் அனைத்து வெளியக அழுத்தங்களிலிருந்தும் விலகி, முற்றுமுழுதாக சுயாதீனமாக செயற்பட வேண்டியது அவசியமாகும்.

தற்போது உயர் நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா, இல்லையா என்பது குறித்து பாராளுமன்ற சிறப்புரிமை பற்றிய குழு ஆராய்ந்து வருவதாக அறிகின்றோம்.

எனவே, இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத் தன்மையை புறக்கணிக்கக்கூடியவாறான அல்லது அதற்கு வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியவாறான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அனைத்து தரப்பினரிடமும் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.