விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட ஆசிரியர், பேராசிரியர்கள் இணக்கம்

152 0

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகளை விரைவாக முடித்துக் கொண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சையை விரைவாக  நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட  ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்  என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செய்வாய்க்கிழமை (04) சுயாதீன எதிர்தரப்பு உறுப்பினர் ஜயந்த சமரவீர  எழுப்பிய கேள்வி பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் இணக்கப்பாடு தெரிவித்துள்ளார்கள்.

பெற்றோல் விநியோகத்திற்கு இராணுவத்தினரை இணைத்துக் கொள்வதை போன்று விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு பிற தரப்பினரை இணைத்துக் கொள்ள வேண்டும்,ஆகவே பேச்சுவார்த்தை ஊடாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

ஆசிரியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களுக்கு உச்ச அளவு கொடுப்பனவை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் இரண்டொரு தினங்களில் அவர்கள் அதற்கான  முடிவை தொழிற்சங்கத்தினர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்கள்.

பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள்,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இம்முறை அதிகரித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக  திறைசேரியிலிருந்து மேலதிகமாக 425 மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் வரி அதிகரிப்பு தொடர்பில் முன் வைத்துள்ள கோரிக்கைகளுக்கும் கல்வி அமைச்சுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

அது நிதியமைச்சோடு சம்பந்தப்பட்டது. அவர்கள் அதற்கான வேண்டுகோளை நிதியமைச்சிடம் முன்வைத்து தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறெனினும் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகளுக்கு அவர்களில் 80 வீதமானவர்கள் இதுவரை இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தை வெற்றிகரமாக     நிறைவடைந்தது,இன்னும் இரண்டொரு தினங்களில் அவர்கள் அது தொடர்பான முடிவை அறிவிப்பார்கள்.அந்த வகையில் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு விரைவாக க.பொ.த சாதாரண தர பரீட்சையை  நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.