சரணடையும் ட்ரம்ப்; ஆயத்தமாகும் நியூயார்க் நகரம்: வன்முறைகளை தவிர்க்க போலீஸ் குவிப்பு

96 0

ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த புகாரில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் விரைவில் சரணடைவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்ப் சரணடையும்போது போராட்டங்கள் நடந்தால் அதை கண்காணிக்கவும், வன்முறைகளைத் தவிர்க்கவும் நியூயார்க் நகரில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டொனால்டு ட்ரம்ப் கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாசப் பட நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு ட்ரம்ப் 1,30,000 டாலர்கள் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு மன்ஹாட்டன் நடுவர் மன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், தற்போது ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஸ்டோர்மிக்கு பணம் தரப்பட்டதை கடந்த 2018 ஜனவரியில் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ கட்டுரையாக வெளியிட்டது. இதுவே ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையாக அமைந்தது.

இந்நிலையில் ட்ரம்ப் விரைவில் நியூயார்க் நீதிமன்றத்தில் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ட்ரம்பின் ஆலோசகர் கூறுகையில், “ட்ரம்ப் திங்கள்கிழமை ஃப்ளோரிடாவிலிருந்து நியூயார்க் வருவார். அவர் அன்றைய தினம் ட்ரம்ப் டவரில் தங்குவார். செவ்வாய்க் கிழமை அவர் நீதிமன்றத்திற்கு செல்வார்” என்று தெரிவித்துள்ளார்.

நியூயார்க் காவல்துறை தரப்பில், “ட்ரம்புக்கு ஆதரவாக குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் திரள்வார்கள். சில அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. அமைதியான போராட்டங்களை தடுக்க முடியாது. ஆனால் வன்முறை ஏதும் ஏற்பட்டுவிடாத வண்ணம் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் தயார்நிலையில் இருக்கிறோம். ட்ரம்ப் நீதிமன்றம் வரும் நாளில் மதியம் 1 மணியுடன் நீதிமன்ற வளாகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அனுமதி கண்காணிக்கப்படும்” என்றார்.