ஆக்கிரமிப்பு நோக்குடன் செயற்படும் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும்

135 0

அறிவியல் ஒழுக்கத்தின் படியான வரலாற்று ஆய்வுகளுக்குப் பதிலாக, அதற்கு மாறான  முறையில் ஆக்கிரமிப்பு நோக்குடன் வரலாற்றுப் புனைவைச் செய்யும் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி நாட்டை ஆபத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இனப்பிரச்சினை, பொருளாதார நெருக்கடி போன்றவற்றினால் நாடு பலவிதமான துயரங்களில் புதையுண்டு போயிருக்கும் சூழலில், இவற்றிலிருந்து மீண்டெழுவதற்குப் பதிலாக மேலும் தீயை மூட்டுவதாகவும் புதைசேற்றில் அமிழ்த்துவதாகவுமே தொல்லியல் திணைக்களம் செயற்படுவருகிறது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாமல் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் போது மத முரண்பாடுகளையும் உருவாக்குவது மிகப்பெரிய பின்னடைவையே தரும். மதங்களின் முரண், இன முரணையும் விட மிக அபாயகரமானது, மிக ஆபத்தான ஒரு விசப் பூண்டாகும். உலகிலேயே ஆகப் பெரிய தீவினை என்றால், அது மதங்களுக்கிடையே உருவாகும் பூசலும் மோதலுமே. இதனால் வரலாற்றில் பல கோடிப் பேரின் உயிர்கள் பலியிடப்பட்டுள்ளது.  உலகெங்கும் மதங்களின் மோதல் நடந்த காலம் அநேகமாக முடிந்து விட்டது. ஆனால் இலங்கையில் அது உயிர்ப்படையப் போகிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது.

ஏனென்றால் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் வடக்குக் கிழக்கில் தொல்லியல் திணைக்களத்தினாலும் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல் – இனமுரண், மதமுரண் – நடவடிக்கைகளை கீழே அட்டவணைப்படுத்துகிறோம்.

1.      நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி குருந்தூர்மலையில் விஹாரை அமைக்கப்பட்டமை.

2.      பொத்துவில் பிரதேச செயலாளரின் நிர்வாக எல்லைக்குட்பட்ட தாண்டியடி சங்கமன்கண்டி படிமலை அடிவாரத்திலேயே இரவோடு இரவாக புத்தர் சிலை வைக்கப்பட்டமை.

3.      வவுனியா வடக்கு ஊற்றுக்குளம் பகுதியில் புத்தர் சிலை அமைக்கப்பட்டமை.

4.      யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெடியரசன் கோட்டை தொல்லியல் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது.

5.      நெடுங்கேணியில் வெடுக்குநாறிமலையில் அமைந்திருந்த ஆதிசிவன் கோவில் இரவோடிரவாக அழிக்கப்பட்டிருப்பது.

6.      கச்சதீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளமை.

இந்த நடவடிக்கைகள் தமிழ், முஸ்லிம் மக்களிடம் பதட்டத்தையும் கொந்தளிப்பையும் உருவாகியுள்ளன. இது மேலும் தொடருமாக இருந்தால் இலங்கைச் சமூகங்கள் மேலும் மேலும் பிளவுண்டு செல்வதற்கே வழிவகுக்கும். அப்படிச் சமூகங்கள் பிளவுண்டால் அதை வெளிச் சக்திகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு. பல மதங்களுக்குரிய தேசம். பல் பண்பாட்டுக்குரிய இடம் என்பதற்குப் பதிலாக, நாட்டில் ஐக்கியத்தையும் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்கி அதைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக தமிழ், முஸ்லிம் சமூகங்களைக் கலவரப்படுத்தும் வகையிலேயே மேற்படி தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகள் உள்ளன.

அறிவியல் ஒழுக்கத்தின் படியான வரலாற்று ஆய்வுகளுக்குப் பதிலாக, அதற்கு மாறான  முறையில் ஆக்கிரமிப்பு நோக்குடன் வரலாற்றுப் புனைவைச் செய்யும் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகள் நிர்வாக நடைமுறைக்கும் முரணானதாக உள்ளது. அத்துடன், வரலாற்று ஆய்வாளர்கள், அறிஞர்களின் ஆய்வுக்கும் நிலைப்பாட்டுக்கும் மாறாகவே இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

மேலும் நாடு இன்றுள்ள சூழலில் இத்தகைய சிலைகளை அமைக்கும் நடவடிக்கைள் அவசியமா? நாட்டில் தொழிற்சாலைகளையும் உற்பத்தி மையங்களையும் உருவாக்குவதற்குப் பதிலாக இனமுரணை ஏற்படுத்தும் விதமாக தொல்லியல் திணைக்களம் செயற்படுவது மிக மிகத் தவறானது. இது மேலும் பாரதூரமான பின்னடைவுகளையும் பின்விளைவுகளையும் உருவாக்கும். எனவே இது தொடர்பாக தாங்கள் உடனடியான இவற்றைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.