சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு-காவல் ஆய்வாளர் ஜாமீன் கேட்டு மீண்டும் மனு

83 0

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். 2020-ல் கரோனா ஊரடங்கு காலத்தில் அனுமதித்த நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்ததாக இவர்களை சாத்தான்குளம் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்குப் பதிந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு சார்பு ஆய்வாளர், காவலர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைதான நாளிலிருந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சிகள் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஸ்ரீதர் உட்பட கைதானோர் ஜாமீன் கேட்டு மாவட்ட, உயர், உச்ச நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியானது.

132 சாட்சிகள்: இந்நிலையில் காவல் ஆய்வாளர் தர் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில், கைதான நாளிலிருந்து சிறையில் இருக்கிறேன். மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் கடந்த3 ஆண்டுகளில் 132 சாட்சிகளில் முக்கியச் சாட்சிகளான ரேவதி, பியூலா உட்பட 47 சாட்சிகள் மட்டுமே இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள சாட்சிகளை விசாரித்து முடிக்க குறைந்தது 5 ஆண்டுகள் வரை ஆகும். ஜாமீன் கோரி பலமுறை மனுத் தாக்கல் செய்தேன். மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. சிபிஐ வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அங்கு மனு தள்ளுபடியானது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.

இதையடுத்து சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 10-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.