பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்

76 0
நாட்டின் நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கான வட்டி விகிதங்கள் மற்றும் வங்கி மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில், நிர்மாணத் துறையினர் எதிர்நோக்கும் நிதிச் சிக்கல்கள் மற்றும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சாகல ரத்நாயக்க, நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று தெரிவித்தார்.

நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் நிதித்துறையின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளித்தனர்.

இக்கலந்துரையாடலில் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க உட்பட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.