சவுதி பேருந்து விபத்தில் 20 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

73 0

சவுதி அரேபியாவில் உள்ளபுனிதத் தலங்களான மெக்கா மற்றும் மெதீனாவுக்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் முஸ்லிம்கள் உம்ரா புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் சவுதி அரேபியாவின் தெற்கில் உள்ள ஆசிர் மாகாணத்தில் உம்ரா புனித யாத்திரை செல்வோரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று மெக்காநகரை நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. சவுதி அரேபியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த யாத்ரீகர்கள் அதில் இருந்தனர்.

இந்நிலையில் மலைகளின் வழியே ஒரு பாலத்தின் மீது அந்தப் பேருந்து செல்லும்போது திடீரென பிரேக் பிடிக்காமல் போனதாக தெரிகிறது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து பாலத்தின் இறுதியில் தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது. இதையடுத்து பேருந்து தீப்பற்றி கரும் புகையுடன் எரியத் தொடங்கியது.

இதில் பயணிகள் வெளியேவரமுடியாமல் பேருந்துக்குள் சிக்கிக் கொண்டதில் 20 பேர்உயிரிழந்தனர். மேலும் 29 பேர்காயம் அடைந்தனர். இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ரமலான் புனித மாதத்தின் முதல்வாரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இம்மாதத்தில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் மெக்கா மற்றும் மதீனாவுக்கு உம்ரா புனித யாத்திரை செல்வது வழக்கமாகும்.