ஆலய சின்னங்கள் சிதைக்கப்பட்டமைக்கு யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டனம்

63 0

வவுனியா மாவட்ட எல்லையிலுள்ள வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் திருத்தல புனித சின்னங்களை சிதைத்தமையும், அப்புறப்படுத்தியமையையும் யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வன்மையாகக்கண்டித்துள்ளது.

இது குறித்து யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு இயக்குனர் அருட்பணி எஸ்.வி.பி.மங்களராஜா வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

வவுனியா மாவட்ட எல்லையிலுள்ள வெடுக்குநாறிமலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் திருத்தல புனித சின்னங்களை சிதைத்தமையும், அப்புறப்படுத்தியமையையும் யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வன்மையாகக்கண்டிக்கின்றது.

இந்து சமயம் இலங்கையின் தொன்மைமிகு மதம் என்பதையும் இலங்கையின் வடக்குக்கிழக்கில் மட்டுமல்ல நாடு முழுவதும் பல பாடல் பெற்ற சைவ வணக்கத்தலங்களும், பழமை வாய்ந்த வழிபாட்டிடங்களும் உள்ளன என்பதை மற்றெல்லா மதத்தவரும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

ஒரு சமயத்தவரது பழமைவாய்ந்த மதத்தலத்தை அகற்றுவது அல்லது சிதைப்பது அல்லது அவசங்கைப்படுத்துவது மதநல்லிணக்கத்துக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை.

அண்மைக்காலமாக சில இந்து மத வணக்கத்தலங்கள் இவ்வாறு பெரும்பான்மை சமயத்தவரால் அழிக்கப்படுவது வேதனையளிப்பதாயுள்ளது. இவ்வாறு பல சம்பவங்கள் நடைபெறும் போது சட்டத்தையும், ஒழுங்கையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டியவர்கள் ஒன்றும் நடைபெறாதது போல செயற்படாதிருப்பது நாட்டுக்கும், மக்களுக்கும், நீதிக்கும், சமாதானத்துக்கும் நல்லதல்ல.

இலங்கையில் பௌத்தர்கள் பெரும்பான்மையினர் என்ற கூற்றை அடிப்படையாகக்கொண்டு நாட்டில் தாம் விரும்பிய இடத்தில் அவ்விடத்தில் தொன்மைமிக்க இந்து ஆலயங்கள் இருந்தாலும் அவற்றை அகற்றிவிட்டு பௌத்தர்கள் தமது விகாரைகளை அமைக்கலாம் என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறாக அண்மைக்காலமாக குருத்தூர் மலை விவகாரம், நெடுந்தீவு வெடியரசன் கோட்டை விவகாரம், கச்சதீவில் புதிதாகப் புத்தர் சிலை வைக்கப்பட்டமை ஆகிய செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட உடன் காத்திரமான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுக்கவேண்டும்.

மீண்டும் மிக விரைவில் சிதைக்கப்பட்டு, அகற்றப்பட்ட வெடுக்கு நாறிமலை ஆதிலிங்கேஸ்வர ஆலய சின்னங்கள் இந்து மத நெறிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட வேண்டுமென்றும் தொன்மைத்தன்மை பாதுகாக்கப்பட் வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றோம்.

இதையே இந்துக்களும், இந்துக்களின் தொன்மைமிகு வரலாற்று பின்னணியையும் இலங்கையின் சமய நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் விரும்பும் எல்லா மக்களும் எதிர்பார்த்து நிற்கின்றனர் என்றுள்ளது.