போர்க்குற்ற விசாரணக்கு கலப்பு நீதிமன்றம் சாத்தியம் இல்லை: ரணில்

238 0

இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிக்க கலப்பு நீதிமன்றம் என்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய சட்ட வாரம் 2017 முன்னிட்டு சட்டத்தரணிகளின் கட்டிடத் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கலப்பு நீதிமன்றம் ஒன்று எமக்கு தேவைப்படுகிறதா என கேள்வி எழுப்பிய பிரதமர், உண்மையில் இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்க முடியுமா என கேட்டுள்ளார்.

அப்படியான யோசனை ஒன்றை கொண்டு வந்தால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள முடியுமா அப்படியில்லை என்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமா என்ற பிரச்சினைகள் ஏற்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிகழ்ந்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றம் ஸ்தாபிக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கும் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.