சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் இரு வாரங்களுக்குள் நியமனம் – சபாநாயகர்

123 0

தேர்தல் ஆணைக்குழு உட்பட சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்துக்குமான உறுப்பினர்கள் நியமனம் இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக 200க்கும் மேற்பட்ட  விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையே, ஆணைக்குழுக்களை நியமிக்கும் நடவடிக்கை நீண்டகாலமாக தாமதித்தமைக்கான காரணமாகும்.  சில விண்ணப்பதாரிகள் 9 ஆணைக்குழுக்களுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இதனால் தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கு சிரமம் ஏற்பட்டிருந்தது.

அத்துடன் புதிதாக அமைக்க இருக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களான தேர்தல் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியனவாகும்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்தும் அரசியலமைப்பு பேரவையினாலே நியமிக்கப்படுகின்றன. அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டு தற்போது 3 மாதங்கள் கடந்துள்ளன. அரசியலமைப்பு பேரவை முதல்தடவையாக கூடியது கடந்த ஜனவரி 25 ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.