கருப்பு உடை அணிந்து வந்தது ஏன்? – சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் பதில்

121 0

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்திமீதான தகுதி இழப்பு நடவடிக்கையை கண்டிக்கும் வகையில், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். இந்த நிலையில், பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனும் கருப்பு நிற சேலையில் பேரவைக்கு வந்தார்.

கேள்வி நேரத்தில் அவர் பேசஎழுந்தபோது, பேரவைத் தலைவர்அப்பாவு, ‘‘காங்கிரஸ் உறுப்பினர்கள்தான் யூனிஃபார்மில் வந்துள்ளனர். நீங்களும் அதே யூனிஃபார்மில் வந்ததுபோல தெரிகிறதே?’’ என்றார்.

அதற்கு வானதி சீனிவாசன், ‘‘எமர்ஜென்சி காலகட்டத்தில் தமிழகத்தில் ஆளுங்கட்சி தலைவர்கள் எப்படியெல்லாம் சிரமப்பட்டார்கள் என்பதை நினைவூட்டவே, கருப்பு உடை அணிந்து வந்தேன்’’ என்றுபதில் அளித்தார். தொடர்ந்து பேசியஅவர், ‘‘காகிதம் இல்லா சட்டப்பேரவையில் வாட்ஸ்அப் மூலம் கேள்விகளை அனுப்ப வசதி செய்யப்படுமா?’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த பேரவைத் தலைவர், ‘‘முதல்வர் ஸ்டாலின் வந்ததும், காகிதமில்லா பட்ஜெட் வந்தது. தற்போது கேள்வி நேரம் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. படிப்படியாக மற்ற வசதியும் கொண்டுவரப்படும்’’ என்றார்.

பின்னர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: ஆண்டுதோறும் அனைத்துமாவட்ட அரசு அலுவலகங்களுக்கும் சேர்த்து 35 டன் காகிதம் தேவைப்படுகிறது. இதற்காக மரங்கள்அதிக அளவில் வெட்டப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இதனால்தான், அரசு அலுவலகங்களை டிஜிட்டல் மயமாக்க‘இ-ஆபீஸ்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது, ‘இ-ஆபீஸ்’ மூலம் 3 லட்சம் கோப்புகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இதனால், பல நன்மைகள் கிடைக்கின்றன. கோப்புகள் காணாமல்போவது தடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ‘இ-விதான்’ திட்டத்தில் சட்டப்பேரவையில் கணினிவைக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கு சென்று பார்வையிட்டு, நமது சட்டப்பேரவைக்கென திட்டத்தை வகுக்குமாறு பேரவைத்தலைவரிடம் தெரிவிக்கப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.