இம்ரான் கான் கொல்லப்படுவார் அல்லது… – பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் பேச்சால் சர்ச்சை

101 0

“இம்ரான் கான் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம்” என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ராணா சனாவுல்லா பேசும்போது, “பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கு எதிரியாக இம்ரான் கான் இருக்கிறார். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானின் அரசியலைக் கொண்டு சென்றிருக்கும் பாதையால் ஒன்று அவர் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம். இம்ரான் கான் அரசியலை பகையாக மாற்றி இருக்கிறார். அவர் எங்கள் எதிரி. அவ்வாறே அவர் நடத்தப்படுவார்” என்று பேசினார்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் (70) கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவி விலகினார். அவரது தலைமையிலான கூட்டணியில் இருந்து, முக்கியக் கட்சி பிரிந்து, எதிர்க்கட்சியுடன் இணைந்ததால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்பே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு எதிராக இம்ரான் தொடர்ந்து பேரணிகளையும், போராட்டங்களையும் நடத்தி வந்தார். கடந்த நவம்பர் மாதம் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இம்ரான் கான் மீது பாகிஸ்தானில் பிரச்சாரத்தின்போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்த வழக்கு, பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்த வழக்கு என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் விரைவில் பாகிஸ்தான் போலீஸாரால் கைது செய்யப்பட இருந்தார். எனினும், இம்ரான் கான் கட்சி ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தால் அவரை கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், கடந்த வாரம் இம்ரான் கானுக்கு அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.