கோட்டவை ஜனாதிபதியாக்கி நாம் மத்திரமல்ல நாட்டு மக்களும் தவறிழைத்து விட்டனர்

61 0

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இல்லை,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம்.ஜனாதிபதி பதவியை மாத்திரம் அவருக்கு வழங்கியுள்ளோம். பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

கட்சி என்ற ரீதியில் மீண்டும் வலுவடைந்துள்ளோம்.ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளே கடந்த காலங்களில் இடம்பெற்றது. பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இடமளித்தால் நாட்டில் உண்மை ஜனநாயகம் இல்லாதொழியும்.

உண்மையான ஜனநாயகத்தை பாதுகாக்க கடுமையான தீர்மானங்களை செயற்படுத்த வேண்டும்.நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஜனநாயக போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார், அவர்களின் உண்மை நோக்கம் என்னவென்பதை நாட்டு மக்கள் தற்போது தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறழைத்துள்ளோம், நாட்டு மக்களும் தவறிழைத்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோரும் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என்றார்.