மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பெண் சிறைக் கைதிகளுக்கு ‘வீடியோ கால்’ வசதி

72 0

மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக சிறையில் உள்ள பெண்கைதிகள், அவர்களது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசும் வசதியை தமிழக சிறைத் துறை அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது. இதன் மூலம், வெளிநாட்டுப் பெண் கைதிகளும் பலனடைய உள்ளனர்.

சிறைக் கைதிகளை சீர்படுத்தி, அவர்கள் விடுதலையான பின்னர்,மீண்டும் சமுதாயத்துடன் இணைந்து மறுவாழ்வைத் தொடங்கவும், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாத வகையில் அவர்களை மாற்றுவதும் சிறைத் துறையின் குறிக்கோளாகும்.

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான தனிச் சிறைகள் 3, மாவட்ட சிறைகள் 4, ஆண்களுக்கான கிளைச் சிறைகள் 100 உள்பட 130-க்கும் மேற்பட்ட சிறைகள் உள்ளன.

2019 தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, தமிழகசிறைகளில் சுமார் 14 ஆயிரம் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 600 பேர் பெண் கைதிகள், 112 பேர் வெளிநாட்டுக் கைதிகள். இதேபோல, தூக்கு தண்டனைக் கைதிகள் 6 பேரும், ஆயுள் கைதிகள் 2 ஆயிரத்து 495 பேரும் சிறையில் உள்ளனர்.

 

சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்தவும், அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து வெளியே வரும்போது, சொந்தக் காலில் நிற்க ஏதுவாக கைத்தொழில் கற்றுக் கொடுக்கப்படுவதாகவும் தமிழக சிறைத் துறை டிஜிபி அம்ரேஸ் புஜாரி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைக் காண, அவர்களது குடும்பத்தினர் அவ்வப்போது சிறைகளுக்கு வருவார்கள். ஆனால், பெண் கைதிகளைக் காண, கணவர், குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் பெரும்பாலும் வருவது இல்லை.

கவுரவம், அவமானம் என இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதனால், சிறையில் உள்ள பெண்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.

இவற்றை போக்க யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது. புத்தகம் படிக்க வைக்கிறோம். மேலும்,அவர்களது திறனை வளர்க்க பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக, சிறையில் உள்ள பெண் கைதிகள், தங்களது குடும்பத்தினருடன் நேரடியாக செல்போனில் பேசும் வகையில், வீடியோ கால் வசதி செய்யப்பட உள்ளது.

அடுத்த வாரம் சோதனை ஓட்டமாக இது தொடங்கப்பட உள்ளது.வீடியோ காலில் பேசும் பெண்கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் மட்டுமே பேசலாம். இதைக் கண்காணிக்க சிறை அதிகாரிகள் உடன் இருப்பார்கள். இதற்காக தனி அறை ஒன்றும் சிறை வளாகத்திற்குள் ஒதுக்கப்படும். மாதம் எத்தனை முறை பேசலாம், எவ்வளவு நேரம் பேசலாம், இதற்குஎவ்வளவு கட்டணமாக வசூலிக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

சிறையில் உள்ள கைதிகளைநேரில் பார்க்க வர வேண்டுமென்றால் பணம், நேரம் செலவாகும். வெளிநாட்டுக் கைதிகளைப் பார்க்க அவர்களது குடும்பத்தினர் தமிழகம் வருவதால், செலவு, நேரம் மேலும் அதிகரிக்கும். ஆனால், வீடியோ காலில் பேசினால் நேரம், பணம், அலைச்சல் எதுவும் இல்லை. இதற்காகவே வீடியோ கால் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சிறையில் உள்ள பெண் கைதிகளின் மன அழுத்தத்தைப் போக்கி,அவர்களை நல்ல குடிமக்களாக வெளியே அனுப்ப வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு டிஜிபி அம்ரேஸ் புஜாரி தெரிவித்தார்.

நாட்டிலேயே முதல் முறையாக சிறையில் உள்ள பெண் கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதியை மகராஷ்டிரா அரசு அறிமுகம் செய்திருந்த நிலையில், இரண்டாவதாக தமிழகத்திலும் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.