தமிழ்க்கலைகளோடு கலைத்திறனில் களமாடும் வளரிளம் தமிழர்களின் எழுகை -18.03.2023

373 0

தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் 19.02.2023, 04.03.2023, 05.03.2023 மற்றும் 11.03.2023 ஆகிய நாட்களில் முறையே வட, மத்திய, வடமத்திய மற்றும் தென் மாநிலங்களுக்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இவ்வாண்டிற்கான கலைத்திறன் போட்டியின் நிறைவாகத் தென்மேற்கு மாநிலத்திற்கான போட்டி 18.03.2023ஆம் நாளன்று சுள்ஸ்பாக் – நியூவைலர் நகரில் நடைபெற்றது.

தமிழர் கலைகளிற் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான போட்டிகளோடு தமிழாலாய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களென மண்டபம் நிறைந்திருக்க, அரங்காற்றுவோரும் கலைச்சுவைஞர்களுமாக அரங்கும் மண்டபமும் தமிழர் கலைகளோடு ஒன்றித்திருந்தமை சிறப்பு. கலைத்திறன் போட்டியிலே துணிவோடும் ஆர்வத்தோடும் பங்கேற்ற போட்டியாளர்களுக்கான மதிப்பளிப்பு ஒவ்வொரு அரங்காற்றுகை நிறைவிலும் வழங்கப்பட்டது.

9:00 மணிக்கு மங்கலவிளக்கேற்றலோடு தொடங்கிய போட்டியில் கலைத்திறனை வெளிப்படுத்தி மாநில மட்டத்தில் முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயங்கள் அரங்கிற்கு அழைத்துப் பாராட்டப்பட்டன. அதேவேளை குழுநிலை மற்றும் தனியொருவருக்கான போட்டியென இருபிரிவுகளிலும் முதல் மூன்று நிலைகளைப்பெற்ற வெற்றியாளருக்கு மதிப்பளிப்புப் போட்டியரங்கிலே வழங்கப்பட்டது. போட்டியின் நிறைவில் நாளை எம் தேசம் விடியும் என்ற நம்பிக்கையோடு தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களுக்கான கலைத்திறன் போட்டி நிறைவுற்றது. தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப்பொறிமுறைக்குட்பட்ட ஐந்து மாநிலங்களிலும் முதல் மூன்றுநிலைகளைத் தமதாக்கிய தமிழாலயங்கள் 33ஆவது அகவை நிறைவுவிழா அரங்குகளில் சிறப்பான மதிப்பளிப்பைப் பெறவுள்ளன.