ஜனநாயகத்தை பாதுகாக்க முன்னெடுத்த செயற்பாடுகளை மறந்து ஜனாதிபதி செயற்படுகின்றமை கவலைக்குரியது

76 0

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த போது , ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னின்று செயற்பட்டுள்ளார். அன்று அவர் முன்னெடுத்த நடவடிக்கைகளை இன்று மறந்து செயற்படுகின்றமை கவலையளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் ஜனநாயக கட்டமைப்பு முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கமே இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. மக்களின் வாக்குரிமை முற்றாக மீறப்பட்டுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பல சதித்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

22 சந்தர்ப்பங்களில் தேர்தலுக்கு தடையை ஏற்பட்ட அரசாங்கம் முயற்சித்துள்ளது. எவ்வாறிருப்பினும் இவர்களது செயற்பாடுகளை முடக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து நீதிமன்றத்தின் உத்தரவையும் நிராகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனநாயகத்தை முடக்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை முற்றாக நிராகரிக்கின்றோம். ஜனநாயகத்தை நீதித்துறை சுயாதீனத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நாம் முன்னிற்போம். நீதித்துறையில் அரசியல் அழுத்தங்களோ , தலையீடுகளோ இடம்பெறுவதற்கு ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி என்ற ரீதியில் நாம் அனுமதிக்கப் போவதில்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த போது , ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக முன்னின்று செயற்பட்டுள்ளார். அன்று அவர் முன்னெடுத்த நடவடிக்கைகளை இன்று மறந்து செயற்படுகின்றமை கவலையளிக்கிறது. தேர்தலை இடைநிறுத்துவதற்கான சகல முயற்சிகளையும் கைவிட்டு , மக்களின் வாக்குரிமையை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறில்லை எனில் வேறு சில குழுக்கள் ஜனநாயக விரோதமாக செயற்படக் கூடும் என்றார்.