நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் பாராளுமன்றம் முறையற்ற வகையில் தலையிடுகிறது

70 0

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த பாராளுமன்றம் அவதானம் செலுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தின் செயற்பாடுகளின் நீதிமன்றம் தலையிடவில்லை, ஆனால் தற்போது நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் பாராளுமன்றம் முறையற்ற வகையில் தலையிடுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலக காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிற தேவைகளுக்கு பயன்படுத்தாமல், தேர்தல் பணிகளுக்கு விடுவிக்குமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவால் பாராளுமன்றத்தில் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பினர் முன்வைத்த சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினை கடந்த புதன்கிழமை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை குழுவின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பாராளுமன்ற சிறப்புரிமையை கொண்டு நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைத்து அவர்களிடம் கேள்வி கேட்பது நீதித்துறையை அவமதிக்கும் ஒரு செயற்பாடாக கருதப்படும் ஆகவே நீதிபதிகளை பாராளுமன்றத்திற்கு அழைக்கும் முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது,என கடும் எதிர்ப்பை தெரிவித்தோம்,அத்துடன் உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது அவசியமற்றது என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள பின்னணியில் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்தும் அறிவித்தலை பாராளுமன்றத்தின் ஊடாக  வெளியிடும் முயற்சிகளை ஆளும் தரப்பினர் முன்னெடுத்துள்ளனர். உயர்நீதிமன்றத்துக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது.

பாராளுமன்றத்தின் அதிகாரத்தை உயர்நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும். பாராளுமன்றத்தினால் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுத்துறை தடுத்து நிறுத்தியது. அதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. உண்மையில் உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவால் பாராளுமன்றத்தில் அதிகாரம் மற்றும் கௌரவம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் செயற்பாடுகளில் நீதிமன்றம் தலையிடவில்லை,ஆனால் தற்போது நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் பாராளுமன்றம் முறையற்ற வகையில் தலையிடுகிறது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் வெறுக்கத்தக்கன. நீதிபதிகளினதும்,நீதித்துறையினதும் கௌரவத்தை பாதுகாக்க சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு குழுவாக செயற்படுவோம் என்றார்.