தேர்தலுக்கு தேவையான பணத்தை ஏன் வழங்காமல் இருக்கிறீர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் கேள்வி

74 0

 தேர்தலுக்கு தேவையான பணம் வழங்குவதை தடை செய்து நீதிமன்ற உத்தரவை அவமதிக்க வேண்டாம். அத்துடன் தேர்தல் இடம்பெறுவதை தடுத்திருப்பது, நாட்டின் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் மரண அடியாகும்.

அதனால் இது தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடினோம் என எதிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) வியாழக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றங்களினால் நாட்டுக்கு பாரிய சேவை இடம்பெற்று வருகின்றன. ஆனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு மார்ச் 9ஆம் திகதி குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் தற்போது ஏப்ரல் 25ஆம் திகதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் அரசாங்கம் தேர்தலுக்கு தேவையான பணத்தை ஒதுக்காமல் இருப்பதால் தேர்தல் நடவடிக்கை தடைப்பட்டுள்ளது. அரசாங்கம் ஏன் தேவையான பணத்தை வழங்காமல் இருக்கிறது.?

அத்துடன் அரசாங்கம் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்திக்கொண்டு அவர்களுக்கு இருக்கும் சிறப்புரிமை பிரச்சினை ஊடாக நாட்டின் நீதிமன்றத்துக்கு விடுக்கப்படும் அழுத்தங்களை உடனடியாக நிறுத்துங்கள். நீதிபதிகளை அசௌகரியங்களுக்கு உட்படுத்த வேண்டாம்.

அதேநேரம் பிரதமரின் அமைச்சான உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்னவை பழிவாங்க வேண்டாம். அவர் தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அவர் எந்த தவறும் செய்யவில்லை.

அத்துடன் நாங்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடும்போது நாட்டின் உள்ளக நடவடிக்கைகளை இணைத்து ஒருபோதும் கலந்துரையாடியதில்லை. அதேபோன்று நாட்டுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் கடன்களை தடுக்கும் வகையில் ஒருபோதும் செயற்பட்டதில்லை.

ஆனால் தேர்தல் இடம்பெறுவதை தடுத்திருப்பது, நாட்டின் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் மரண அடியாகும். நாட்டில் சர்வாதிகார ஆட்சி இல்லை.

ஆனால் சர்வாதிகார முறையிலேயே நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. நாட்டுக்கு மக்களுக்கு இருக்கும் வாக்குரிமைய பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அதனால் வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடி தேர்தல் நடவடிக்கைகளை செயற்படுத்தும்  உரிமை எமக்கும் இருக்கின்றது. மாறாக எமது நாடு பல சர்வதேச ஒப்பந்தங்களை செய்திருக்கிறது.

அந்த ஒப்பந்தங்கள் அனைத்திலும் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படவேண்டும் என தெரிவித்திருக்கிறது. அதனால்தான் நாங்கள் தேர்தலை நடத்துவதன் தேவையை வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து தெரிவித்தோம். மாறான நாட்டுக்கு கிடைக்கும் உதவிகளையோ வேறு உள்ளக விடயங்கள் தொடர்பாகவோ ஒருபோது கதைத்ததில்லை என்றார்.