பாரிய கடன்களை மீள செலுத்தவே நிறுவனங்களை விற்க நடவடிக்கை

164 0

இலாபமீட்டும் நிறுவனங்கள் அல்லது சொத்துக்கள் மீதே முதலீட்டாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். எனவே தான் அதிக இலாபமீட்டக் கூடிய வகையிலும், பாரிய கடன்களை மீள் செலுத்தக் கூடிய வகையிலும் சொத்துக்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளயர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. கடன் மறுசீரமைப்பிற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரசாங்கத்துடன் இணைந்து நாட்டு மக்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் மாத்திரமே எதிர்கால சந்ததியினருக்கு நாடு மிஞ்சும்.

பாரிய கடன்களை மீள செலுத்துவற்காக சில சொத்துக்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தீர்மானிப்பதற்கு விசேட குழுவொன்றும் காணப்படுகிறது.

அதன் அடிப்படையில் முதலீட்டாளர்கள் அதிகம் ஆர்வம் செலுத்தும் சொத்துக்களையே விற்பனை செய்ய முடியும். நஷ்டமடைபவற்றில் முதலீடு செய்வதற்கு எவரும் முன்வருவதில்லை.

அத்தோடு இலாபம் கிடைக்கின்றது என்பதற்காக இலாபமீட்டும் சொத்துக்களை வைத்துக் கொண்டிருக்கவும் முடியாது. நாட்டுக்கு பாரிய இலாபம் கிடைக்கக் கூடியவாறு , கடனை மீள செலுத்துவதற்கு உதவும் வகையிலேயே சொத்துக்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

இறக்குமதி தடைகளை ஒரே சந்தர்ப்பத்தில் நீக்க முடியாது. அவ்வாறு செய்தால் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையும். எனவே நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி என்பன இவ்விடயம் தொடர்பில் பொறுப்புடன் செயற்பட்டுக் கொண்டிருகின்றன என்றார்.