அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவிற்கு வழங்கப்பட்ட தற்காலிக தலைவர் பதவி நியமனம் எதிர்வரும் 27ஆம் திகதியுடன் நிறைவு பெறும்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் தெரிவுக்குழுவுக்கு நிலையான தலைவரை நியமனம் செய்யுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று (23) வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வு இடம்பெற்ற போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பாராளுமன்ற தெரிவுக் குழுக்களில் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழு முக்கியமானதாக காணப்படுகிறது. நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள நிலையில் நித தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழு ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.
அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் எதிர்க்கட்சிகளின் பரிந்துரைக்கு அமைய அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவி நியமனம் இடம்பெறுவதில் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.
அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவராக எதிர்க்கட்சியின் உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்,பின்னர் அவர் பதவி விலகினார்,
அதனை தொடர்ந்து அரசாங்கத் தரப்பின் உறுப்பினர் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த தற்காலிக நியமனம் எதிர்வரும் 27 ஆம் திகதியுடன் நிறைவு பெறும், ஆகவே அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவுக்கு தற்காலிக நியமனத்தை வழங்க முடியாது, ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் வெகுவிரைவில் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.
அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் நியமனம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபையில் குறிப்பிட்டார்.

