வாய்மூல விடைக்கான கேள்விகளை காணி வழக்கு போல் இழுத்தடிக்க வேண்டாம்

120 0

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்  வாய்மூல விடைக்கான கேள்விகளுக்களை காணி வழக்கு போல் தாமதப்படுத்த வேண்டாம்.பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தொடர்பில் 2020 ஆம் ஆண்டு முன்வைத்த கேள்விகளுக்கு ,மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் தற்போது பதிலளிக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (23) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக மொஹமட் உவைஸ் பதவி  வகிக்கிறார்,இவருக்கு 1 இலட்சம் ரூபா மாத சம்பளத்துடன் 6000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுகிறது என பதலளித்தார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில்  காணி வழக்கு இழுத்தடிக்கப்பட்டு தாமதமாக்கப்படுவதை போன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு தாமதமான நிலையில் பதில் கிடைக்கப் பெறுகிறது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் யார்,அவரது மாத சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் என்ன என்ற கேள்விகளை 2020 ஆம் ஆண்டு முன்வைத்தேன்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக சுமித் விஜேசிறி  பதவி வகித்தார்,ஆனால் தற்போது பிறிதொருவர் தலைவராக பதவி வகிக்கிறார். தற்போதைய தலைவரின் பெயர், சம்பளம் தொடர்பான விபரங்களை மின்சக்தி இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகிறார். எவ்வாறு இருப்பினும் இரண்டாண்டுகள் கடந்து தாமதமான நிலையில் பதில் வழங்கியுள்ளமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.