கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக் காண்பிப்பது அவசியம்

117 0

உறுதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதும், நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தை உரியகாலத்தில் அமுல்படுத்துவதும் இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு மிகவும் அவசியமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்களிடமிருந்து நிதியியல் உத்தரவாதம் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கமும் கடன்வழங்குனர்களும் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை நேற்று முன்தினம் திங்கட்கிழமை அனுமதியளித்துள்ளது. அதனையடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உதவி தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

உயர் பணவீக்கம், வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, நிலையற்ற பொதுக்கடன்கள், நிதியியல்துறைசார் குறைபாடுகள் போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை பாரிய பொருளாதார மற்றும் சமூக ரீதியான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. முக்கிய நிறுவனங்கள் மற்றும் நிர்வாகக்கட்டமைப்புக்களில் ஆழமான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன.

உறுதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதும், நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தை உரியகாலத்தில் அமுல்படுத்துவதும் இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு மிகவும் அவசியமாகும்.

வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரைப் பாதுகாக்கும் அதேவேளை நிதி மற்றும் கடன் உறுதிப்பாட்டை நிலைநாட்டுவதற்கு வருமான அடிப்படையிலான நிதியியல் ஒருங்கிணைப்பு இன்றியமையாததாகும்.

அதன்படி தற்போது நடைமுறையிலுள்ள செயற்திறன்மிக்க வரி மறுசீரமைப்பு தொடர்ந்து அமுல்படுத்தப்படுவதுடன், குறிப்பாக வறிய சமூகங்களை இலக்காகக்கொண்ட சமூகப்பாதுகாப்பு வலையமைப்பு மேலும் வலுப்படுத்தப்படவேண்டும்.

அதேபோன்று நிதியியல் நடவடிக்கைகள் வெற்றிகரமானவையாக அமைவதற்கு வரியறவீடு தொடர்பில் நிலையான நிதியியல் கட்டமைப்பு மறுசீரமைப்பு, பொதுநிதி மற்றும் செலவின முகாமைத்துவம், உரியவாறான வலுசக்தி மற்றும் எரிபொருள் விலையிடல் முறைமை என்பன அவசியமாகும்.

அடுத்ததாக முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்களிடமிருந்து அவசியமான நிதியியல் உத்தரவாதம் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கமும் கடன்வழங்குனர்களும் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்ட வரையறைகளுக்கு அமைவாக வெளிப்படைத்தன்மைவாய்ந்த முறையில் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் கடன்வழங்குனர்களுக்கிடையில் சமனான முறையில் ‘கடன்சுமை’ பகிரப்படல் என்பன வரவேற்கத்தக்க விடயங்களாகும்.

மேலும் ‘இலக்கிடப்பட்ட பணவீக்கம்’ தொடர்பான நம்பகத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இலங்கை அதன் ‘பல்நோக்கு பணவீக்கக் கட்டுப்பாட்டு உத்தியை’ தொடர்ந்து பேணவேண்டும்.

அதேபோன்று போதியளவிலான மூலதனத்தைக்கொண்ட வங்கிக்கட்டமைப்பைப் பேணுவது இன்றியமையாததாகும். மூலதனமயப்படுத்தப்பட்ட வங்கிக்கட்டமைப்புச்செயற்திட்ட அமுலாக்கம், நிதியியல் மேற்பார்வை வலுவாக்கம் மற்றும் நெருக்கடி முகாமைத்துவ செயற்திட்டம் என்பன நிதியியல்துறை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அவசியம்.

அதேபோன்று ஊழல் ஒழிப்புச்சட்டத்தைப் புதுப்பித்தல் உள்ளடங்கலாக ஊழல்மோசடிகளைக் கையாள்வதற்குத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடரவேண்டும். அதுமாத்திரமன்றி அபிவிருத்திப்பங்காளிகளின் ஒத்துழைப்புடன் பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்தும் வகையிலான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.