தமிழக பட்ஜெட் அறிவிப்புகள்: தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்

76 0

தமிழக பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

வி.சி.க.தலைவர் திருமாவளவன்: திமுகவின் ‘திராவிட முன்மாதிரி’ அரசு உருவாக்கியுள்ள இந்தபட்ஜெட் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது. ‘மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு வழிகாட்டும் ‘சமூகநீதி மாநிலம்’ தமிழ்நாடு என்பதை உணர்த்துகிறது.

பாமக சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி: இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கியிருப்பதன்மூலம் 12 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்பது பெரிதும் வரவேற்கத்தக்கது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன்: தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பார்வையோடு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வளர்ச்சியின் பாதையில் தொடர்வதை பாராட்டுகிறேன்.

காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை: இல்லத்தரசிகளுக்கு எப்போது உரிமைத் தொகை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் உரிமைத் தொகை தொடர்பான அறிவிப்பு வந்துள்ளது. வடசென்னை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஎம்எல்ஏ. தளி ராமச்சந்திரன்: பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத் தக்கது.

கொமதேக பொதுச்செயலா ளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: பட்ஜெட்டில் பல்வேறு புதிய முயற்சிகளும், மக்கள் எதிர்பார்க்கின்ற திட்டங்களும், வளர்ச்சி திட்டங்களும் நிறைந்துள்ளன. சமூக நலம் சார்ந்த திட்டங்களை அதிகப்படுத்தி நிதி பற்றாக்குறையைக் குறைத்து இருப்பது மிகப்பெரிய சாதனை.

சமக தலைவர் ரா.சரத்குமார்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘மகளிர் உரிமை தொகை’ திட்ட அறிவிப்பும், பத்திரப்பதிவுக் கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: திமுகவின் மூன்றாவது பட்ஜெட்டிலாவது விடிவுகாலம் பிறக்குமா என காத்திருந்த ஏழை மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம்ரூ.1,000 உரிமைத் தொகையை, திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும்.

கல்விக்கடன் ரத்து, எரிவாயு மானியம், முதியோர் உதவித் தொகை உயர்வு, மாதம் ஒரு முறைமின் கட்டணம், பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றவை நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் நம்பிக்கைத் துரோகத்தின் மொத்த உருவமாகக் காட்சி அளிக்கிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு, மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய்வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. செப்டம்பர் மாதம்இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, ரூ.29,000 வழங்க வேண்டும். அதோடு தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்பஅட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன்: குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம்ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுமென தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு, சொத்து வரி, கலால் வரி,சாலை வரி என, தமிழகத்தின் வரிவருவாய் அதிகரித்துள்ளது, ஆனாலும், நிதி, வருவாய் பற்றாக்குறையை குறைத்து காட்டுவதற்காக, அரசு திட்டங்களுக்கான நிதியை குறைத்துள்ளது தெரிகிறது. மொத்தத்தில் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும், தொலைநோக்கு இல்லாத பட்ஜெட்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: பட்ஜெட்டில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு, மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,661 கோடி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கு ரூ.3,513 கோடி உள்பட பல்வேறுதுறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.

அதேசமயம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆக்கப்பூர்வமான எந்த திட்டமும் இடம்பெறவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. யானை பசிக்கு சோளப்பொறி வழங்கும் பட்ஜெட் டாகவே உள்ளது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக பயன்தரும் திட்டம், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் இடங்களைநிரப்புவது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இல்லை. மகளிருக்கு மாதம் ரூ.1,000 வரும் மாதத்தில் இருந்தே வழங்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: திமுக தேர்தல்அறிக்கையில் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படுமென கூறிவிட்டு, தற்போது தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமேவழங்கப்படுமென ஏமாற்றியுள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம், டீசல் விலைகுறைப்பு, மாதாந்திர மின் கட்டணம்செலுத்தும் முறை உட்பட பெரிதும் எதிர்பார்த்த அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மக்களின் அடிப்படை தேவையை அடைவதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்: சிறுபான்மை சமூக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்.