வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம்: ‘ஜி20’ இளம் தூதுவர்கள் மாநாட்டில் ஆளுநர் பெருமிதம்

126 0

 வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் பலம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

‘ஜி20’ இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி வரவேற்றார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம், பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. புதிய நவீன எலக்ட்ரானிக் உபகரணங்களால் மனிதர்களுக்கு மனஅழுத்தம், தற்கொலை, மனஉளைச்சல் உள்ளிட்டவை அதிகரித்து காணப்படுகின்றன. கரோனா காலத்தில் தடுப்பூசிக்காக உலக நாடுகள் திண்டாடிய நிலையில், இந்தியா தடுப்பூசிகளை தயாரித்து அதனை உலக நாடுகளுக்கும் இலவசமாக வழங்கியது.

நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் பழக்கம் நமது மரபணுவிலேயே உள்ளது. தமிழில் கூறப்பட்டுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளபோதும் ஒரு சில இடங்களில் பசியால் மக்கள் அவதிப்படும் நிலை காணப்படுகிறது.

ஒரே குடும்பம்: இந்தியாவை ஒரு குடும்பம்போல் பிரதமர் பார்க்கிறார். வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் பலம். இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்தியாவின் ‘ஜி20’ மாநாடு நிர்வாகி அமிதாப் காந்த், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் அறங்காவலர் ஆதித்யா, நடிகை கவுதமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பல்துறை வல்லுநர்கள் பேசினர்.