டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி ஸ்திரமடையும்

56 0

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெறுவதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டவுடன், அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்படியாக அதிகரித்துச்செல்லுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கடன்வழங்குனர்களின் நிதியியல் உத்தரவாதம், பொருளாதார மறுசீரமைப்பு உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளும் இலங்கையால் பூர்த்திசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இச்செயற்திட்டத்துக்கான சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதி குறித்த இறுதி அறிவிப்பு செவ்வாய்கக்ிழமை (21) வெளியாகவுள்ளது.

இதுஇவ்வாறிருக்க கடந்த ஒருவாரகாலமாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்பயாக அதிகரித்துச்சென்றதுடன், மீண்டும் கடந்தவார இறுதியில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் படிப்படியாக அதிகரித்துச்செல்லுமெனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இதனையொத்த கருத்தொன்றை வெளியிட்டிருந்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்ததன் பின்னர் வெளியகக்கடன்மறுசீரமைப்புச் செயன்முறையை ஆரம்பிக்கமுடியும் எனவும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 185 – 200 க்குள் பேணமுடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தளம்பல் நிலையில் காணப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இருப்பினும் தற்போது டொலர் நெருக்கடிக்குத் தீர்வுகாணப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் இலங்கை தொடர்பில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலோங்கும் என்றும், அதனூடாகப் பெருமளவான முதலீடுகளை ஈர்த்துக்கொள்ளமுடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.