341 உள்ளூராட்சி அமைப்புகளுக்காக அமுல்படுத்தப்பட்ட வேலைத் திட்டம்

113 0

நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து உள்ளூராட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. தீவின் 341 உள்ளூராட்சி அமைப்புகளுக்காக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, முதலாவது செயலமர்வு இன்று (20) ஹொரணை, கும்புகவிலுள்ள ´பிரசாந்தி´ விழா மண்டபத்தில் நடைபெற்றது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து உள்ளூராட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு ஹொரணை மாநகர சபை, ஹொரண பிரதேச சபை, புளத்சிங்கள பிரதேச சபை மற்றும் மதுராவல பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், பணி அத்தியட்சகர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்காக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிப்பதும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க உதவுவதுமே இந்த செயலமர்வின் நோக்கமாகும்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் தொடர்பான அடிப்படைத் திட்டங்கள், காணி அபிவிருத்தி, கட்டடங்களை நிர்மாணித்தல் மற்றும் மாற்றியமைத்தல், இணக்கச் சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் ஏனைய விதிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

08.07.2021 முதல் அமுலுக்கு வரும் வகையில், நகர அபிவிருத்தி அதிகாரசபையானது நகர்ப்புற அபிவிருத்திப் பகுதிகள் தொடர்பான புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளது. இது நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி அமைப்புகளுக்கும் செல்லுபடியாகும்.

இலங்கையின் மொத்த உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 341 ஆகும். இதில் 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள் இதற்கு சொந்தமானது. எதிர்வரும் காலங்களில் இந்த அனைத்து உள்ளூராட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கும் இந்த செயலமர்வு நடத்தப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல் – வலயம் 02) லலித் விஜயரத்ன, மேல் மாகாண பணிப்பாளர் குணதிலக பண்டார, பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) நிர்மலா குலதுங்க, பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) உபாலி விமலரத்ன, உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) யசந்த பெரேரா, உதவிப் பணிப்பாளர் (சட்டம்) புத்திக சொய்சா மற்றும் அதன் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.