மாமனாரும் மருமகனும் சர்வகட்சி மாநாடுகளும்

129 0

றைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இனப் பிரச்சினைக்கான தீர்வு மாநாடும், தற்போதைய ஜனாதிபதி ரணிலின் மாநாடு மாதிரியே எதுவித முடிவுகளும் எட்டப்படாமல் கலைந்தது.

தமிழர்களுக்கான தீர்வு எதனையுமே வழங்காமல் 1984 ஜனவரி 10 தொடக்கம் டிசம்பர் 21 வரை ஒரு வருடமாக மாநாட்டை இழுத்தடித்தார்.

அந்த மாநாட்டில் பிரதிநிதிகளின் கருத்துக்களும் முன்மொழிவுகளும் அமைச்சரவையில் டிசம்பர் 21ஆம் திகதி பரிசீலிக்கப்பட்டன. அரச தரப்பினர் கூறியவற்றில் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலை கூட்டணி அறிவித்துள்ளதால் மாநாட்டை தொடர முடியாமல் தனது முன்மொழிவுகளை கைவிடவும் முடிவு செய்துள்ளதாக டிசம்பர் 26ஆம் திகதி அறிவித்தார்.

இனப் பிரச்சினைக்கு கட்சிகள், மதத் தலைவர்கள் மாநாடு மூலம் தீர்வு காண்பேன் என எதிர்க்கட்சித் தலைவராக 1975இல் யாழ்.முற்றவெளியிலும், 1977இல் தெற்கில் தேர்தல் கூட்டங்களிலும் ஜெயவர்தன  உறுதியளித்திருந்தார்.

அத்தோடு 1977இல் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக குறிப்பிட்டிருந்தார்.

1977 ஜூலை 21 தேர்தலில் அவர் பிரதமரானதும்  ஒகஸ்ட் 15 முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால் இனப் பிரச்சினைக்கான தீர்வினை மறந்து, ‘போர் என்றால் போர்; சமாதானம் என்றால் சமாதானம்!’ எனக் கூறி போருக்கு திட்டமிட்டார்.

1978இல் புதிய அரசியலமைப்பை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டு வருவதிலேயே தீவிரமாக செயற்பட்டார்.

1979இல் தமிழ்ப் போராளிகளை ஒடுக்குவதற்கான பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தினார்.

1979 ஜூலை 31 தொடக்கம் டிசம்பர் 31 வரையான 6 மாதங்களில் தமிழ்ப் போராளிகளை ஒழிக்க மருமகனான பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவுக்கு சகல அதிகாரங்களையும் வழங்கி, வடக்கே அனுப்பியதன் பின்னர், பல தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்; பலர் காணாமல்போயினர்; சிலர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

1981 ஜூன் மாதத்தில் மாவட்ட அபிவிருத்தி சபையால் தீர்வு காண யாழ்ப்பாணத்தில் தேர்தலை நடத்தி, ஐக்கிய தேசிய கட்சியையும் போட்டியிடவைத்து குழப்பினார்.

அதன் பின்னர் ஐ.தே.க குண்டர்களின் வன்முறை, யாழ். நகர நூலகம் தீ வைப்பு போன்ற குற்றச் செயல்கள் இடம்பெற்றன.

1981 ஜூலை மாதம் எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்தார்.

சர்வகட்சி மாநாட்டு திட்டங்களுக்கு எதிராக மகா சங்க உயர் சபைகளும், பௌத்த சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன.

அக்காலச் சூழலில் ‘பிராந்திய சபைகள் தமிழ் ஈழத்தை உருவாக்க ஒருபோதுமே அனுமதிக்கமாட்டோம்’ என வண பேராசிரியர் கலாநிதி ராகுல தேரர் கூறினார்.

1984 டிசம்பர் 8 அன்று அஸ்கிரிய பலிப்பான சந்தானந்த, வண.மதிஹே பன்னாசிக, வண.தலல்ல தம்மானந்த, வண.வல்பொல ராகுல, வண.ஹென்பிட்டி கெதர ஞானவன்ச, வண.பெல்லன்வல விமலரட்ன, வண.மாதுலுவாவ சோபித ஆகிய தேரர்களை சந்தித்து சில திட்டங்களை விளக்கினார்.

இதன்போது பேசப்பட்ட அரசியலமைப்பு, பௌத்தம், சிங்கள இனம் போன்ற விடயங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, மாகாண சபை திட்டத்தை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்வதற்கு பிரபல பிக்கு மதிகே பன்னசிக தேரர் கோட்டே நாகவிகாரை கூட்டத்தில் பிக்குமாருக்கு அழைப்புவிடுத்தார்.

அத்துடன் புதுடில்லி முன்மொழிவுகளை (இணைப்பு C) தாம் நிராகரிப்பதாகவும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை விட அதிகமாக தமிழர்களுக்கு எதையுமே அரசு வழங்கக்கூடாது எனவும் தெரிவித்து, பிராந்திய சபை, மாவட்ட சபை, மாகாண சபை, கிராமோதய சபை என்பவற்றை பிக்குமார் எதிர்த்தனர்.

பார்த்தசாரதியுடன் ஒப்புக்கொண்ட பிரேரணைகளை பின்னர் நிராகரித்து அவரையும்  முழு நாட்டையுமே ஜே.ஆர். ஏமாற்றினார்.

ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க தைரியம் இல்லாத ஜே.ஆரை எப்படி நம்புவது என எதிர்க்கட்சித் தலைவர் அனுர பண்டாரநாயக்கா கூறியிருந்தார்.

ஜே.ஆர். புது டில்லியில் ஒப்புக்கொண்ட பிரேரணைகளை முன்வைக்காமல், அவற்றை மாற்றி தயாரித்துள்ளார் என அமிர்தலிங்கம் தொலைப்பேசி மூலம் பார்த்தசாரதியிடம் முறையிட்டார்.

‘ஜே.ஆர்., இராணுவ ரீதியில் தமிழர்களை நசுக்கவே திட்டமிடுகிறார்; அவரை நம்பி கலந்துகொள்ளாதீர்கள்’ என தமிழ் இயக்கங்கள் எச்சரித்தும், 1983 கலவரத்தால் தமிழகத்தில் இருந்த கூட்டணித் தலைவர்கள் இந்தியாவின் நெருக்குதலால் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

1984 ஜனவரி 10 பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் கூட்டணித் தலைவர்கள் சமர்ப்பித்த தீர்வுக்கான ஆவணங்களை பரிசீலித்து, இவை இந்தியாவின் தீர்வுத் திட்டமல்ல, கூட்டணியின் தீர்வுத்திட்டமே என்றார் ஜே.ஆர்.

பிராந்திய சுயாட்சியே தமிழர்களின் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு என பிரதமர் இந்திரா காந்தி ஜே.ஆர். இந்தியா சென்றபோது கூறினார்.

சிறிமாவோவின் எதிர்ப்பால் அதனை வழங்க முடியாது எனவும், மாகாண சபையை சிங்கள மக்கள் எதிர்ப்பார்கள் எனவும் சில காரணங்களை கூறினார்.

1984 மார்ச் 23 தேசிய பந்தோபஸ்து அமைச்சராக லலித் அத்துலத் முதலியை நியமித்து, மார்ச் 24ஆம் திகதி படை அதிகாரிகளுடன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி மோதல்களை ஆரம்பித்தார். பொதுமக்கள் பலர் அதில் உயிரிழந்தனர்.

1984 மே மாநாட்டை ஜே.ஆர். ஒத்திவைத்து, 19ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை ஜப்பான், தென்கொரியா, சீனா சென்று, நிதி உதவியையும் ஆயுதங்களையும், தென்னாபிரிக்காவிடம் இருந்து கவச வாகனங்களையும் பெற்று, பாரிய யுத்தத்துக்கு படை அதிகாரிகளுடன் திட்டம் வகுத்தார்.

‘இந்தியாவின் C இணைப்பு பிராந்திய சபைகளுக்கு பதிலாக மாவட்ட சபைகள் மட்டுமே தமிழர்களுக்கு வழங்கத் தயார்; இந்தியா எம்மை மிரட்ட முடியாது’ என பிரதமர் ஆர்.பிரேமதாச பாராளுமன்றத்தில் கூறினார்.

மாநாட்டில் அமிர்தலிங்கம்,

இலங்கையில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து, தங்களை தாங்களே ஆளும் ஒரு தனித்துவமான தேசம் என்பதை காட்டியுள்ளனர்.

1617இல் போர்த்துக்கீசராலும், பின்னர் டச்சுக்காரராலும், பின்பு ஆங்கிலேயராலும் ஆளப்பட்டனர்.

1833இல் ஆங்கிலேயர்கள் நாட்டின் நிர்வாகத்தை ஒருங்கிணைத்து தமிழர்களையும் சிங்களவர்களையும் சமமாக நடத்தினர்.

1948இல் சுதந்திரம் கிடைத்த பின்னர் அரச அதிகாரங்கள் சிங்களவர்களின் கைகளுக்கு சென்றதும் தமிழர்கள் திட்டமிட்டவாறு இனப்பாகுபாடு காட்டப்பட்டனர்.

தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை மீட்பதற்காக நடத்திய அகிம்சை போராட்ட வரலாற்றையும், அவற்றை நசுக்க அரசு மற்றும் குண்டர்களின் வன்முறைகளையும் விரிவாக விளக்கிக் கூறினார்.

தமிழர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் சிங்கள வன்முறையின் விளைவுதான் ‘தனிநாடு’ கோரிக்கை என்றும், வடக்கு, கிழக்கு தமிழர்கள் தங்களை ஆளக்கூடியவாறு உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டால் தமிழர்கள் தனிநாடு கோரிக்கையை கைவிடத் தயார் என குறிப்பிட்டார் என்பது கடந்தகால வரலாறாகும்.

ம.ரூபன்