அனுதாபங்கள் மூலமே அரசியலுக்கு வரும் பெண்கள்: முன்னாள் எம்.பி சந்திரகுமார்

112 0

இலங்கையைப் பொருத்தவரை பெரும்பாலான பெண்கள் கணவன் அல்லது தந்தையின் மறைவுக்குப் பின்னரான அனுதாபங்கள் மூலமே அரசியல் அதிகாரங்களுக்கு வந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (18.03.2023) வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற சமத்துவக் கட்சியின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையைப் பொருத்தவரை பெரும்பாலான பெண்கள் கணவன் அல்லது தந்தையின் மறைவுக்குப் பின்னரான அனுதாபங்கள் மூலமே அரசியல் அதிகாரங்களுக்கு வந்துள்ளனர். இந்த நிலைமை மாற்றப்படவேண்டும் பெண்களின் அரசியல் அதிகாரங்களுக்கு ஆளுமையின் ஊடாக பிரவேசிக்க வேண்டும்.

உலகில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என நாம் பெருமைப்பட்டுக் கொள்கின்றோமே தவிர அரசியில் பெண்களுக்கு போதுமான வாய்ப்புக்களை வழங்குவதற்கு இந்த நாடு இன்னமும் தயாராக இல்லை. ஒரு சில இஸ்ஸாமிய நாடுகளில் அரசியலில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்கள் போன்று கூட இலங்கையில் வழங்கப்படவில்லை என்பது கவலைக்குக்கரியது.

இலங்கையின் வாக்காளர்களில் அதிகளவில் பெண் வாக்காளர்கள் உள்ள போது இந்த வாய்ப்பு மறுப்பு என்பது தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. எங்களுடைய சமத்துவக் கட்சியைப் பொறுத்தவரைப் பெண்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்த கட்சியாகக் காணப்படுகின்றோம்.

உள்ளூராட்சி மன்றங்களில் கூட அதிகளவில் எங்களுடைய கட்சி பெண்களே உறுப்பினர்களாக உள்ளனர். நாம் கட்சியின் பெயரில் மாத்திரம் சமத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை செயற்பாடுகளிலும் அதனை நிரூபித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமத்துவக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜாக்குவின் லூசியா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மதகுருமார்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.