பாதாள உலகக் குழுவின் தலைவரான சமயங் உள்ளிட்ட 7 பேரை படுகொலை செய்வதற்குத் தேவையான தகவல்கள் சிறைச்சாலைக்குள் இருந்து வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய குழு இது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த தாக்குலுக்கு திட்டமிட்ட பிரதான சந்தேகத்துக்குரியவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகத்துக்குரியவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களைக் கைதுசெய்வதற்காக காவல்துறைமா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்துக்குரியவர்களுள் சிலர் போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் காரணமாக கட்டுநாயக்க மற்றும் மத்தள வானூர்தி தளங்களில் இரண்டு விசேட காவல்துறை குழுக்கள் சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

