யாழ். நெடுந்தீவு வெடியரசன் கோட்டையில் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் அறிவித்தல்

184 0

யாழ். நெடுந்தீவு பகுதியிலுள்ள புராதன முக்கியத்துவம் வாய்ந்த வெடியரசன் கோட்டையானது புராதன பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த இடிபாடுகளைக் கொண்ட பகுதியென அடையாளப்படுத்தி அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவித்தல் பலகை இலங்கை கடற்படையினரால் வைக்கப்பட்டது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், வரலாற்று ரீதியான உண்மைகளை சிதைக்கும் நடவடிக்கை இது.

தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் அரசாங்க தொல்பொருள் திணைக்களங்களும், இராணுவத்தினரும், கடற்படையினரும் பல இடங்களை முன்னர் தமிழர் வாழ்ந்த இடங்களை சிங்களவர்கள் வாழ்ந்த இடம் என எடுத்துக்காட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விடயங்களை ஆதாரங்களுடன் சர்வதேச நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகங்கள் மற்றும் தூதரங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெடியரசன் கோட்டை இடிபாடுகளைக் கொண்ட பகுதியென அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் எமது ஊடகம் கடற்படையின் ஊடக பேச்சாளர் கயான் விக்ரமசூரியவை தொடர்புகொண்டு வினவிய போது,

இலங்கை அரசாங்கத்தால் புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடமாக வர்த்தமானி அறிவித்தலில் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வெடியரசன் கோட்டையில், எந்தவொரு சட்டவிரோதமான நடவடிக்கைகளையும் கடற்படையினரால் முன்னெடுக்க முடியாது.

வெடியரசன் கோட்டையில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த அறிவித்தல் பலகை சில தரப்பினரால் அகற்றப்பட்டுள்ளது. அதனை யார் செய்தார்கள் என எனக்கு தெரியாது.

இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் தொல்பொருளியல் திணைக்களத்தின் அலுவலகங்கங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் குறித்த அறிவித்தல் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்குமாறு எமக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கேற்ப குறித்த அறிவித்தல் பலகை வைக்கப்பட்டது.

தற்போது சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் வைக்கப்பட்டிருக்கும் இந்த அறிவித்தல் பலகைகளை தமிழ் மொழியிலும் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.