ஐ.நா அமர்வில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்க்கூடாது – கி. துரைராசசிங்கம்

399 0
ஐ.நா அமர்வில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்பது தான் தமிழரசுக் கட்சியின்  இலட்சியம் சார்ந்த  முடிவாக உள்ளதாக தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி. துரைராசசிங்கம் தெரிவித்தார்.
வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியால வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் முதண்மை அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்ஐ.நாவில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்பது தான் தமிழரசுக் கட்சியின்   முடிந்த முடிவாகவும்  உள்ளது. இந்த நிலையில் இதன்  யதார்த்த நிலைமை ஒன்றும்  இருக்கின்றது . அதன் மூலம் இன்னும் அழுத்தங்களைக் கொடுத்து எமது காரியங்கள் சாத்தியப்பட வேண்டும் என்பதும் எமது இலக்கு. இதிலே அரசு தோல்வியடைய வேண்டும் என்பதல்ல எமது காரியங்கள் சாத்தியமாக்கப்பட வேண்டும் என்பதே மிக முக்கியமானது.
இந்த நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற நிலைமை தான் தமிழர்கள் ஆகக் கூடிய அளவு தங்களுடைய அரசியல் அதிகாரங்களைப் பெறும் வகையில் முயற்சி செய்யக் கூடிய ஒரு நிலைமை.
இந்த நாட்டினுடைய மிகப்பெரிய கட்சிகள் இரண்டும் ஒன்றாகச் சேர வேண்டும். சர்வதேசத்தினுடைய பார்வை எங்கள் மீது விழ வேண்டும். நாங்கள் தமிழர்கள் எல்லாம் ஒன்றுபட்டு இருந்திட வேண்டும் என்கின்ற இந்த மூன்று விடயங்களை எமது தலைவர்கள் தொடர்ச்சியாகச் சொல்லி வந்தார்கள். இதில் இரண்டு விடயங்கள் நடைபெற்று விட்டன மூன்றாவது விடயமான நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்கின்ற அந்த விடயம் மட்டும் தான் மீகுதி இருக்கின்றது.
இந்த நேரத்தில் எங்களுக்குள்ளே உணர்ச்சிப் பிரவாகங்கள் நிச்சயம் உண்டு. எத்தனை நாளைக்குத் தான் சிறைக் கைத்திகளை இன்னும் வைத்திருப்பது, எத்தனை நாளைக்குத் தான் இராணுவம் ஆக்கிரமித்த இடங்களை இன்னும் விடாதிருப்பது, எத்தனை நாளைக்குத் தான் அரசியல் தீர்வுத் திட்டத்தை இன்னும் தள்ளித் தள்ளி வைப்பது, எத்தனை நாளைக்குத் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சரியான உறுத்தமான விடையை அளிக்காமல் இருப்பது என்கின்ற விடயத்தில்  எங்களுக்கெல்லாம் ஆத்திரம், கொதிப்பு வருகின்றது. பாரதத்தில் சூதாட்ட களத்தில் தருமனின் பொறுமையைப் பொறுத்திட முடியாமல் பீமன் பொறுமை இழந்து தருமனை நிந்தித்த தருணம் போன்று எமது மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இவ்வாறு பொறுமை இழந்த வகையில் அவர்கள் பலவாறு சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அது அவர்களின் உணர்வின் வெளிப்பாடு. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் மறுக்க முடியாத மறைக்க முடியாத ஒரு நம்பிக்கை இருக்கின்றது. தருமன் எந்தவகையில் நியாயத்தை நிலை நாட்டினானோ அந்த வகையில் எங்கiளுடைய தலைமை இதனை நிலைநாட்டும் .
இன்று ஐக்கிய நாடுகள் சபையில் அரசினுடைய வேண்டுகோள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றன, அது சம்பந்தமான முடிவெடுக்கக் கூடிய நிலையிலே இருக்கின்றன. அரசு இன்னும்  கால அவகாசம் வேண்டி நிற்கின்றது. எங்களைப் பொருத்தவரையிலே கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்பது தான் எங்களுடைய முடிந்த முடிவு. அது இலட்சியம் தொடர்பான கருத்து. இருப்பினும் யதார்த்த நிலைமையும் இருக்கின்றது அதன் மூலமும் இன்னும் அழுத்தங்களைக் கொடுத்து எமது காரியங்கள் சாத்தியப்பட வேண்டும் . அந்த வகையில் கால அவகாசம் என்கின்ற விடயத்திற்கு விடை இறுக்கப்படுகின்ற போது கால அவகாசம் கொடுக்க வேண்டிய ஒரு நிலைமை வந்தால் அது மிகவும் கண்டிப்பான நிபந்தனைகளோடு கூடியதாக இந்த விடயங்கள் தொடர்பாக மிக இறுக்கமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்ற விடயத்திலே உறுத்தங்களை வைத்ததாகத்தான் அது இருக்கும்.
அதே நேரத்தில் எமது விடயங்கள் தென்பகுதிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் ஏற்கனவே சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கின்றோம். இன்னும் அதனை நாங்கள் விரிவாக்குவோம். எமது தமிழ்த் தேசியக் கூட்மமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து இது தொடர்பான மூலோபாயத்தனை நாங்கள் மின விரைவில் வகுக்க இருக்கின்றோம். ஆந்த வகையில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து உழைப்போம், எமது மக்களுக்கான கடமைகளை மறக்காத வபைகயில் நிறைவேற்றிடுவோம் என்று தெரிவித்தார்.