யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான இவ்வாண்டுக்கான துடுப்பாட்டப் போட்டி மார்ச் மாதம் 9,10, மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளுக்கிடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
விளையாட்டு மைதான ஒழுங்காக மதுபோதை, போதைவஸ்துக்கள் பாவனையுள்ள எவரும் விளையாட்டினைப் பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள், என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் அனுமதிக்கப்படுவர் எனவும் ஒரு இடத்தை விட்டு இன்னொரு பகுதிக்கு அல்லது மைதானத்தை சுற்றிவர முடியாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி சீருடையுடன் மாணவர்கள் வீதிகளில் உலா வருதல் அல்லது பணம் சேகரிப்பில் ஈடுபடுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
மீறுவோர் பாதுகாப்பு துறையினரால் பொறுப்பேற்கப்படுவர் எனவும் போட்டி நடைபெறும் நாட்களில் மைதானத்தின் எல்லைக் கோட்டிற்குள் இரு கல்லூரி விளையாட்டு வீரர்கள் மத்தியஸ்தர்கள் மாணவ தலைவர்கள், வைத்திய ஆலோசகர்கள் தவிர்ந்த ஏனையோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டில் பாதுகாப்பினை மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒழங்கு செய்யும் அதிகாரம் இரு கல்லூரி சமூகத்தினராலும் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வடக்கின் 111ஆவது போட்டியின் பரிசில்கள் விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சிறந்த துடுப்பாட்ட வீரருக்கு துடுப்பு, கேடயம் மற்றும் பணப்பரிசு என்பனவும் சிறந்த பந்து வீச்சாளருக்கு துடுப்பு, கேடயம், சிறந்த களத்தடுப்பாளருக்கு துடுப்பு, கேடயம் மற்றும் பணப்பரிசு, சகலதுறை ஆட்டக்காரருக்கு துடுப்பு, கேடயம், ஆட்டநாயகனுக்கு துடுப்பு, கேடயம் மற்றும் பணப்பரிசு சிறந்த விக்கற் காப்பாளருக்கு துடுப்பு, கேடயம் மற்றும் பணப்பரிசு, வெற்றி பெறும் அணிக்கான கேடயம் மற்றும் 10 ஆயிரம் பணப்பரிசு என்பவற்றுடன் இரு அணிகளுக்கும் விளையாட்டு உபகரணப் பொதியும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

