24 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெற்றிப்பெற்றுள்ளது. முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வினை அரசாங்கம் வழங்காவிடின் மாபெரும் தொடர் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அகில இலங்கை துறைமுக சேவை சங்கத்தின் தலைவர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள துறைமுக சேவை சங்கத்தின் காரியாலயத்தில் புதன்கிழமை (15 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசாங்கத்தின் வரி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 42 துறைமுக சேவை சங்கங்களை ஒன்றிணைத்து முன்னெடுத்த 24 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெற்றிப்பெற்றுள்ளது.
பணி புறக்கணிப்பு துறைமுக சேவைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என அரசாங்கம் குறிப்பிடுவது அடிப்படையற்றது.
துறைமுகத்தின் நான்கு பிரதான சேவைத்துறையினரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். கப்பல் உள்வருகை, வெளிசெல்லல் பிரிவு மற்றும் பொருள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய பிரிவினரும் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டார்கள்.
நாட்டின் பொருளாதாரத்தின் கேந்திர மத்திய நிலையமாக துறைமுகம் விளங்குகிறது. நேற்றைய பணிபுறக்கணிப்பினால் பாரிய நட்டத்தை துறைமுக அதிகார சபை எதிர்கொண்டுள்ளது. அரசாங்கமே எங்களை பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு தள்ளியது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வினை அரசாங்கம் வழங்காவிடின் எதிர்வரும் நாட்களில் மாபெரும் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

