சென்னை வெள்ள அபாய குறைப்புக்கான ஆலோசனை குழுவின் இறுதி அறிக்கை

163 0

 சென்னை பெருநகரில் வெள்ளஅபாய குறைப்பு மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், குழுவின் தலைவர் வெ.திருப்புகழ் நேற்று வழங்கினார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக வெ. திருப்புகழ் நியமிக்கப்பட்டார். சென்னையில் மழைநீர் தேங்காத வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கையை ஆலோசனைக்குழு தலைவர் திருப்புகழ் சமர்ப்பித்ததுடன், அறிக்கையின் விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது முதல்வர் பேசியதாவது:

ஆட்சிக்கு வந்தவுடன் கரோனாவை சமாளிக்க, அரசு முழுவேகத்தில் செயல்பட்டது. அதைத்தொடர்ந்து வந்த பெருமழையால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அதனை எதிர்கொண்டதுடன், இதற்கு நிரந்தரத் தீர்வுகாண முடிவெடுக்கப்பட்டு திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.