புகையிரத தொழிற்சங்க போராட்டத்தினால் பொது போக்குவரத்து சேவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வழமைக்கு மாறாக அதிக பேருந்துகளை இன்று சேவையில் ஈடுபடுத்துவோம் என அரச மற்றும் தனியார் பேருந்து சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபை
புகையிரத தொழிற்சங்க போராட்டத்தினால் பொது போக்குவரத்து சேவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.தூர பிரதேசங்களுக்காக மேலதிகமாக இன்று அதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
பொது போக்குவரத்து சேவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது என போக்குவரத்து அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.ஆகவே பொது பயணிகள் அச்சமில்லாமல் இன்றைய தினம் தமது அன்றாட பணிகளில் ஈடுபடலாம் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இலங்கை தனியார் பேருந்து சங்கம்
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை. மாத வருமானம் பெறும் அரச ஊழியர்களால் போராட்டத்தில் ஈடுபட முடியும்,ஆனால் நாட்கூலி பெறும் தரப்பினரால் போராட்டத்தில் ஈடுபட முடியாது.
புகையிரத தொழிற்சங்கத்தினரது பணி புறக்கணிப்பு போராட்டத்தினால் பொது போக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையாது.பாடசாலைகள்,அலுவலகங்கள் உட்பட பொது சேவைகள் அனைத்தும் வழமை போல் இடம்பெறும்.
கொவிட் பெருந்தொற்று மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளில் இருந்து தற்போது தான் தனியார் பேருந்து தொழிற்துறை உயிர்பெற்றுள்ளது.
தற்போது நாங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டால் அடுத்த மாதம் புத்தாண்டு காலத்தில் பிச்சை எடுக்க நேரிடும்.ஆகவே வழமைக்கு மாறாக இன்றைய தினம் அதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவோம் என இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

